பொன் சிவகுமாரனின் திருவுருவச் சிலைக்கு அஞ்சலி

94 0

இராணுவத்தினரால் தகர்க்கப்பட்டு, உரும்பிராயில் மீள பிரதிஷ்டை செய்யப்பட்ட பொன் சிவகுமாரனின் சிலைக்கு முன்னிலையில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் மற்றும் போராளிகள் நலன்புரிச் சங்கத்தினர் இன்று (5) காலை உணர்வுபூர்வமாக  ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலில் சயனைட் உட்கொண்டு உயிர் துறந்த முதல் நபர் என்று கூறப்படும் பொன் சிவகுமாரனின் 51ஆவது நினைவுதினம் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உணர்வுபூர்வமாக இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

உரும்பிராயில் அமைந்துள்ள பொன் விவகுமாரனின் சிலை யுத்த காலத்தில் இராணுவத்தினரால் பல தடவை இடித்து இழிவுபடுத்தப்பட்டது.

இவ்வாறாக இடிக்கப்பட்ட சிலை 1975ஆம் ஆண்டு இதே திகதியில், சிறைக்கு சென்று திரும்பிய  முத்துக் குமாரசுவாமி என்ற இளைஞரால் திறந்து வைக்கப்பட்டது.

தமிழ்த் தேசியவாதிகளால் அமைக்கப்பட்ட பொன் சிவகுமாரனின்  சிலை இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டதன் பின்னர், அந்த சிலை மற்றும் நினைவுக்கல் உள்ளிட்டவை  உரும்பிராய் சந்தை வளாகத்தில் மண்ணுக்குள் புதையுண்டு காணப்படும் நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக பதவி வகித்தபோது உரும்பிராய் தியாகராஜா நிரோஸினால் மீள பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த சிலையின் முன்னிலையிலேயே இன்று காலை வலிகாமம் கிழக்க பிரதேச சபைத் தவிசாளர் நிரோஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செய்தனர்.

இதன்போது போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன், குயிலன், தனுபன் ஆகியோர்  பொன் சிவகுமாரனின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.