ஊழல் எதிர்ப்பு விடயத்தில் விசேட பிரேரணையை அரசாங்கம் கொண்டுவர வேண்டும். தனி நபர்கள் சட்டவிரோத சொத்துக்களை சேர்த்தல், நாட்டுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். இது நியாயமானதே. அதேபோன்று அரசியல் கட்சிகளுக்கு வருகின்ற நிதி தொடர்பாகவும், அந்த நிதி எங்கிருந்து வருகிறது, அது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்று விசாரணைகளை முன்னெடுக்க எந்தவொரு நிறுவனமும், செயற்பாடும் இல்லாத நிலைமையே காணப்படுகிறது என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) நடைபெற்ற 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக இந்த அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டமூலத்தை நாங்கள் பாராட்டுகிறோம். குறிப்பாக, இந்த நாட்டில் ஊழல் தற்போதும் நடைபெற்றுவருகின்றன. சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளும் தற்போது நாட்டில் நடக்கின்றன. விசேடமாக போதைப்பொருள் விற்பனை நடக்கின்றன. மாணவர்களை அழிக்கும் நோக்கில் போதைப்பொருட்களை விற்பனை செய்கின்றனர். இவ்வாறான விற்பனையுடன் தொடர்புடையவர்கள் மற்றும் தரகர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக சில அதிகாரிகளும் பொலிஸாரும் இருப்பதை அவதானிக்க முடிகிறது. நாட்டில் தற்போது நடைபெறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்கு மூலக் காரணங்களாக போதைப்பொருள் பாவனையே இருக்கிறது. இதன்படி அரசாங்கம் போதைப்பொருளை தடுப்பதற்கு அதிகளவான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
ஊழல் எதிர்ப்பு விடயத்தில் விசேட பிரேரணை அரசாங்கம் கொண்டுவர வேண்டும். தனி நபர்கள் சட்டவிரோத சொத்துக்களை சேர்த்தல், நாட்டுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். இது நியாயமானதே. அதேபோன்று அரசியல் கட்சிகளுக்கு வருகின்ற நிதி தொடர்பாகவும், அந்த நிதி எங்கிருந்து வருகிறது. அது எப்படி பயன்படுத்தப்படுகிறது என்று விசாரணை நடத்த எந்தவொரு நிறுவனமும் செயற்பாடும் இல்லாத நிலைமையே காணப்படுகிறது.
நாட்டில் ஏற்படும் பிரளயங்கள், பொருளாதார ரீதியிலான பின்னடைவுகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆட்சியை கவிழ்ப்பதற்கான சதி முயற்சிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கு வருகின்ற நிதியும் காரணமாக இருக்கின்றன.
மறைமுகமாக வேறு நாடுகளில் இருந்து நிதி கொண்டுவரப்படுகிறது. இதனை விசாரணை செய்வதற்காக கட்சிகளுக்கு வருகின்ற நிதி தொடர்பில் ஆராய்வதற்காக சட்டமூலமொன்றை கொண்டுவர வேண்டும். இந்த அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கோருகின்றேன் என்றார்.

