முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தனது சேவையாளர்களின் சம்பளத்தை பொது வங்கி கணக்கில் வைப்பிட்டு அதனை பகிர்ந்தளித்தமை குற்றம் என்று குறிப்பிடப்படுகிறது. தேசிய மக்கள் சக்தியின் 159 பாராளுமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி நிதியத்துக்கு செல்கிறது. நிதியத்தின் ஊடாகவே சம்பளம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இது மிகப்பெரிய மோசடியாகும். தொன் கணக்கில் இவர்கள் பொய்யுரைத்து விட்டு தற்போது பிறரை பொய்யர்கள் என்று விமர்சிக்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) நடைபெற்ற 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஊழல் எதிர்ப்பு சட்டத்தை கடந்த அரசாங்கம் தான் இயற்றியது. ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளை பேச்சளவில் மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டிருக்காமல் செயலளவிலும் காண்பித்துள்ளோம்.
எவ்விதமான பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பற்றி பல விடயங்களை குறிப்பிட்டுள்ளோம்.
கடந்த ஜனவரி மாதமளவில் நாட்டில் ஏற்பட்ட கொள்கலன் சிக்கலுக்கு தீர்வு காணும் பொருட்டு அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டது.
பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு மாத்திரமே இந்த குழுவுக்கு பணிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சட்டவிரோதமான முறையில் 323 கொள்கலன்களை விடுவித்தார்.
சட்டவிரோதமான முறையில் 323 கொள்கலன்களை விடுவித்த பிமல் ரத்நாயக்க வெளியில் உள்ளார். அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
ஆனால் முறைப்பாடளித்தவர்களை விசாரணை செய்ய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தனது சேவையாளர்களின் சம்பளத்தை பொது வங்கி கணக்கில் வைப்பிட்டு அதனை பகிர்ந்தளித்தமை குற்றம் என்று குறிப்பிடப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தியின் 159 பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதச்சம்பளம் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி நிதியத்துக்கு செல்கிறது. நிதியத்தின் ஊடாகவே சம்பளம் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
பாராளுமன்ற சிறப்புரிமை சட்டத்தின் 11 ஆம் பிரிவில் ‘ பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அரசியல் கட்சி நிதியத்தில் வைப்பிலிடுவது ஆகாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே 159 உறுப்பினர்களின் மாத சம்பளம் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி நிதியத்துக்கு செல்வது பாரியதொரு மோசடியாகும்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் இம்முறை உள்ளுராட்சிமன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 3296 உறுப்பினர்களுக்கு மாதம் 21 ஆயிரம் ரூபாய் அளவில் சம்பளம் வழங்கப்படுகிறது.
3296 உறுப்பினர்களின் சம்பளம் கட்சியின் நிதியத்துக்கு செல்கிறது. கெஹெலிய ரம்புக்வெல்லவின் செயற்பாடு குற்றமாயின் இது எவ்வகையான குற்றம் என்பது விளங்கவில்லை.
வடமேல் மாகாணத்தில் அரச வாகனம் விற்கப்பட்டமை தொடர்பில் குறிப்பிட்ட விடயத்தில் தவறு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். பொய்யை நான் உண்மை என்று தொடர்ந்து அழுத்தமாக திரிபுப்படுத்தவில்லை.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரிசி மாபியா உள்ளது என்றார். ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அரிசி மாபியா இல்லை என்றார்.
ஆளும் தரப்பின் உறுப்பினர் கொட்டாச்சிகே உகண்டா நிதி பற்றி பேசினார். ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பொய் சொல்வது ஜனநாயக உரிமை என்றார்.
இல்லாத கலாநிதி பட்டத்தை இருப்பதா க சொன்னீர்கள், 12 இலட்சத்துக்கு கார் வழங்க முடியும் என்றார்கள்;, பின்னர் அவ்வாறு குறிப்பிடவில்லை என்றீர்கள்,
தொன் கணக்கில் பொய் சொல்லி விட்டு தற்போது இல்லை என்கின்றீர்கள், குறைகளை சுட்டிக்காட்டுபவர்களை பொய்யர்கள் என்கின்றீர்கள் என்றார்.

