கத்தி முனையில் மிரட்டி வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது!

122 0

பல்வேறு  பிரதேசங்களில் வீதிகளில் பயணிக்கும் நபர்களை கத்தி முனையில் மிரட்டி வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் கந்தானை மற்றும் கொட்டதெனியாவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கந்தானை மற்றும் கொட்டதெனியாவ பொலிஸாரால் கம்பஹா – கொட்டதெனியாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் மூவரும்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கந்தானை , கட்டுவெல்லேகம மற்றும் மீரிகம ஆகிய பிரதேசங்களில்  வசிப்பவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் மூவரும் மீரிகம,கொட்டதெனியாவ, பன்னல, திவுலப்பிட்டிய, பெம்முல்ல, கம்பஹா உள்ளிட்ட பல்வேறு  பிரதேசங்களில் வீதிகளில் பயணிக்கும் நபர்களை கத்தி முனையில் மிரட்டி தங்க நகைகளை கொள்ளையிட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிளும், பெம்முல்ல பிரதேசத்தில் வைத்து இளைஞன் ஒருவனிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாக  பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளன.

இது தொடர்பில் கொட்டதெனியாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .