கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகேயின் தலைமையில், ஜூன் 03, அமைச்சின் கேட்போர் கூடத்தில் அகில இலங்கை சுழியோடிகளின் தேசிய மையத்தின் (Sri Lanka National Centre for Divers) சுழியோடிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் அனைத்து சுழியோடிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி அண்மைய காலத்தில் இடம்பெற்ற முதல் கூட்டம் இதுவென சுழியோடிகளின் தேசிய மையம் குறிப்பிட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு உட்பட ஐந்து மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர்.
இதன் மூலம் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் அவர்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடிந்தது. இதன்போது சுழியோடிகள் பல விடயங்களை முன்வைத்தனர்.
நாடு முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட சுழியோடிகள் அலங்கார மீன்பிடி, இறால் பிடித்தல், சங்கு மற்றும் கடல் அட்டைகள் பிடித்தல் போன்ற அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் தொழில்களில் ஈடுபட்டு தமது வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர். நாட்டுக்கு பாரமாக அமையாமல், தாமாகவே முன்வந்து தமது தொழில்களில் ஈடுபடும் இவர்களின் பிரச்சினைகளை ஆராய்வதும், புதிய யோசனைகளைப் பெற்றுக்கொள்வதும் இச்சந்திப்பின் பிரதான நோக்கமாக இருந்தது.
பிரதானமாக கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் முறைமை சுழியோடிகளுக்கு தற்போதுள்ள அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் முறைமைக்கு பதிலாக, வெளிப்படையான புதிய முறைமைக்கான யோசனைகளை ஒரு மாதத்திற்குள் முன்வைக்குமாறு பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டார். 2026ஆம் ஆண்டு முதல் சுழியோடிகளுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்ட்ஸ்’ நோய்த்தொற்றுக்கு சிகிச்சை – அதிக ஆழத்திற்கு செல்லும்போது ஏற்படும் ‘பெண்ட்ஸ்’ போன்ற நோய் நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான விலை உயர்ந்த ‘decompression’ இயந்திரத்தை அரச மருத்துவமனைகளில் மேலும் நிறுவுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பிரதி அமைச்சர் இணக்கம் தெரிவித்தார். இது எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஒரு யோசனையாக முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சுழியோடல் உபகரணங்களுக்கான வரிச் சலுகைகள் – சுழியோடல் உபகரணங்கள் மற்றும் கருவிகள் மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரிகள் மற்றும் ஆடம்பர வரிகளை நீக்கி, சலுகை விலையில் அவற்றை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நிதியமைச்சின் கவனத்திற்கு கொண்டுவருவதாக அமைச்சர் உறுதியளித்தார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் சுழியோடிகளுக்கு வெளிநாடுகளில் உள்ள வேலை வாய்ப்புகளை கண்டறிவது தொடர்பில், முறையான யோசனையொன்றை முன்வைத்தால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் கலந்துரையாடி தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
கடல் சுற்றுலா மற்றும் தூய்மைப்படுத்துதல் சுற்றுலா ஈர்ப்பை அதிகரிக்க செயற்கை சூழலியல் அமைப்புகளை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அதேவேளை, அழிந்துபோன பவளப்பாறைகள் மற்றும் கடல் அடியில் உள்ள கழிவுகளைத் தூய்மைப்படுத்துவதற்காக சுழியோடிகள் தாமாக முன்வந்தனர். இதனைப் பாராட்டிய பிரதி அமைச்சர், தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார்.
இந்திய இழுவைப் படகுகள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
வடக்கில் உள்ள இந்திய இழுவைப் படகுகளினால் கடல் படுகையும், மீன்களின் வாழ்விடங்களும் அழிவடைவதைத் தடுக்க தலையிடுமாறு கோரப்பட்டது. அத்துடன், செயற்கையாக பவளப்பாறைகளை வளர்ப்பதற்கும், மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இதற்கான பொருத்தமான இடங்கள் குறித்த யோசனைகளை முன்வைக்குமாறு சுழியோடிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகள் குறித்த விஞ்ஞான ஆய்வு
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் – வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் உட்பட அனைத்து சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்காக பாதுகாப்புப் படைகளுடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்படவுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார். மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் சுழியோடிகளின் பிரதிநிதிகளுக்கு பங்கேற்று தமது பிரச்சினைகளை முன்வைக்க எதிர்காலத்தில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலின் முன்னேற்றத்துடன், எதிர்காலத்தில் மீண்டும் சுழியோடிகள் சங்கங்களுடன் கலந்துரையாடி தேவையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் இறுதியாக உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எச்.எஸ். ஹத்துருசிங்ஹ, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜெ.கஹவத்த, அமைச்சின் அதிகாரிகள், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்தின் (நாரா – NARA) அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.





