வவுனியாவில், ஊடகவியலாளர்களின் உதவியுடன் திருடன் ஒருவன் பிடிக்கப்பட்டுள்ளான்(காணொளி)

285 0

புதுக்குடியிருப்பு தொழிற்சாலையொன்றில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற திருட்டுச்சம்பத்துடன் தொடர்புடையவரை ஊடகவியலாளர்கள் இனம்கண்டு பொலிஸாரின் உதவியுடன் மடக்கிப்பிடித்த சம்பவம் நேற்று வவுனியாவில் இடம்பெற்றது.

கடந்த முதலாம் திகதி புதுக்குடியிருப்பு தொழிற்சாலையொன்றில் பணியாற்றி வந்த நபரொருவர் தொழிற்சாலையில் எவரும் இல்லாத நிலையில் அங்கிருந்த அலுவலகத்தில் பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியை உடைத்து திருடியுள்ளார்.

இந்நிலையில் நேற்று குறித்த நபர் வவுனியா நகர்ப்பகுதியில் நடமாடுவதை அவதானித்த ஊடகவியலாளர்கள் குழு, குறித்த தொழிற்சாலையின் உரிமையாளருடன் தொடர்புகொண்டு திருடர் தொடர்பான மேலதிக விபரங்களை கோரியிருந்ததுடன், குறித்த நபரே திருடன் என்பதனை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

எனினும் குறித்த நபர் ஊடகவியலாளர்களின் அவதானிப்பில் இருந்து தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையில் வவுனியா பொலிஸாருக்கு ஊடகவியலாளர்கள் தகவல் வழங்கியிருந்தனர். அதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததும் பொலிஸருக்கு உதவியாக ஊடகவியலாளர்களும் தலைமறைவாகிய நபரை வர்த்தக நிலையங்கள், பேரூந்துகள், விடுதிகளில் தேடியிருந்தனர்.

இந்நிலையில் வவுனியா முதலாம் குறுக்குத் தெருவில் இருந்த விடுதியொன்றில் குறித்த திருட்டுடன் தொடர்புடைய நபர் இருப்பதை அறிந்துகொண்ட ஊடகவியலாளர்கள், பொலிஸாருக்கு தகவலை வழங்கி குறித்த நபரை கைதுசெய்தனர்.

தற்போது திருட்டுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார், வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஊடகவியலாளர்களின் செயற்பாடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பொலிஸார், ஊடகவியலாளர்களின் சமூகப்பணி குறித்தும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.