பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதில் சிக்கல் இல்லாத 161 உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளில் பெரும்பாலான அதிகார சபைகளின் கன்னி அமர்வு திங்கட்கிழமை (02) சுபவேளையில் இடம்பெற்றது. இதன்போது மேயர்,பிரதி மேயர் மற்றும் சபை தலைவர்கள், பிரதி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சத்தியபிரமாணம் செய்து கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
பெரும்பான்மையை பெறாத 178 உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளின் மேயர், பிரதி மேயர், தலைவர் மற்றும் பிரதி தலைவர் ஆகிய பதவிகளுக்கான நியமனங்கள் உள்ளுராட்சிமன்ற ஆணையாளரின் தலையீட்டுடன் இடம்பெறவுள்ளது. இரகசிய வாக்கெடுப்பு அல்லது பகிரங்க வாக்கெடுப்பு ஊடாக இந்த தெரிவுகள் இடம்பெறும்.
339 உள்ளுராட்சிமன்றங்களுக்கான வாக்கெடுப்பு 2025.05.06 ஆம் திகதியன்று நடைபெற்றது. ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி 265உள்ளுராட்சிமன்றங்களையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி 36 உள்ளுராட்சிமன்றங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 14 உள்ளுராட்சிமன்றங்களையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6 உள்ளுராட்சிமன்றங்களையும் கைப்பற்றின. ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் 5 இற்கும் குறைவான உள்ளுராட்சிமன்றங்களை பெற்றுக்கொண்டன. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உட்பட முன்னிலை அரசியல் கட்சிகள் ஒரு உள்ளுராட்சிமன்றங்களையும் கூட கைப்பற்றவில்லை.
இந்த முடிவுகளின் பிரகாரம் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் 161 உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளின் தனித்த பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் இயலுமை காணப்பட்டது.இதற்கமைவாக இந்த 161 உள்ளுராட்சிமன்ற அதிகாரசபைகளுக்குரிய உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நேற்று முன்தினம் பிரசுரித்தது.
பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 14 மாநகர சபைகளில் 13 மாநாக சபைகள் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி வசமாகியுள்ளதுடன், அக்கரைப்பற்று மாநகர சபை தேசிய காங்கிரஸ் வசமாகியுள்ளது.12 நகரசபைகளில் 11 நகர சபைகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ள நிலையில் மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அத்துடன் 135 பிரதேச சபைகளில் 127 சபைகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளதுடன், ஏனைய சபைகளை எதிர்க்கட்சிகள் முறையே கைப்பற்றியுள்ளன.
161 உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளில் பெரும்பாலான சபைகளின் பணிகள் நேற்று சுப வேளையில் ஆரம்பமாகின. மேயர், பிரதி மேயர், தலைவர் மற்றும் பிரதி தலைவர் ஆகியோர் பதவி பிரமாணம் செய்துக் கொண்டதன் பின்னர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் மின்சார சங்கத்தின் தலைவராக செயற்பட்ட ரஞ்சன் ஜயலால் கடுவெல மாநகர சபையின் மேயராக நேற்று பதிவியேற்றுக்கொண்டார்.இதேபோல் கொழும்பு நிர்வாக மாவட்டத்தில் மொறட்டுவ, கல்கிசை , தெஹிவளை உட்பட ஏனைய நிர்வாக மாவட்டங்களில் உள்ளுராட்சிமன்றங்களின் பணிகள் ஆரம்பமாகின.

