பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குமாறும் பதலீடு செய்யவேண்டாம்

65 0

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பிரயோகிப்பதன் ஊடாக ஊக்குவிக்கப்படும் அரசியல் சகிப்புத்தன்மை இன்மையும், அதனூடாக நாட்டின் அரசியல் கலாசாரத்தின்மீது ஏற்படக்கூடிய தாக்கங்களும் எப்போதும் சீர்செய்யப்படமுடியாதவையாகும். நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் அடுத்தடுத்து ஆட்சிபீடமேறிய அரசாங்கங்களினால் நிகழ்த்தப்பட்ட அரச ஒடுக்குமுறை, வன்முறை மற்றும் பிரிவினைவாத அடையாள அரசியல் ஆகியவற்றிலிருந்து நாம் விலகிச்செல்லவேண்டிய நேரம் இதுவாகும். எனவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கும் அதேவேளை, அதனைப் பிறிதொரு சட்டத்தின் ஊடாகப் பதிலீடு செய்யவேண்டாம் என 240 சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் நீதியமைச்சிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் நீதியமைச்சிடம் கையளிக்கப்பட்ட கூட்டு அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

1979 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்தை இரத்துச்செய்தல் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை உருவாக்கல் என்பன தொடர்பில் நீதியமைச்சு பொதுமக்களிடமிருந்து அபிப்பிராயங்களையும், பரிந்துரைகளையும் கோரியிருப்பதுடன், அதற்கு மிகக்குறுகிய இரண்டு வாரங்கள் கால அவகாசத்தை வழங்கியிருக்கின்றது.

முதலாவதாக புதியதொரு பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து நாம் மிகுந்த கவலையும், ஏமாற்றமும் அடைகின்றோம். பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதாக தேர்தல் பிரசாரத்தின்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது. அச்சட்டத்தினைப் போன்ற மிகமோசமானதும், அடக்குமுறைகளுக்கு வழிவகுக்கக்கூடியதுமான சட்டங்கள் தமது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படாது எனும் வெளிப்படையான பொறுப்பேற்பு இருந்தது.

அவ்வாறிருக்கையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் அவசியம் தொடர்பான பகிரங்க அறிக்கைகள் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் குறித்துப் பரிசீலிப்பதற்கென பிரத்யேக குழு நியமனம் என்பன பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை மீறுகின்ற நடவடிக்கைகளாகும்.

இவ்வாறான சட்டங்கள் இலங்கையின் பெரும்பான்மையின நிர்வாக இயந்திரத்தினால் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன, எவ்வாறு இனவாதத்தினால் கருதியாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து புதிதாக நியமிக்கப்பட்ட குழு அறியவில்லை என்பதையே அதன் அறிவிப்பு காண்பிக்கின்றது. அதேபோன்று இக்குழுவில் அரச அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் உள்ளடக்கியிருக்கின்ற போதிலும், பாதிக்கப்பட்ட நபர்கள், பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தின் பிரதிநிதிகள், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் உள்ளடங்கவில்லை.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பிரயோகிப்பதன் ஊடாக ஊக்குவிக்கப்படும் அரசியல் சகிப்புத்தன்மை இன்மையும், அதனூடாக நாட்டின் அரசியல் கலாசாரத்தின்மீது ஏற்படக்கூடிய தாக்கங்களும் எப்போதும் சீர்செய்யப்படமுடியாதவையாகும். நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் அடுத்தடுத்து ஆட்சிபீடமேறிய அரசாங்கங்களினால் நிகழ்த்தப்பட்ட அரச ஒடுக்குமுறை, வன்முறை மற்றும் பிரிவினைவாத அடையாள அரசியல் ஆகியவற்றிலிருந்து நாம் விலகிச்செல்லவேண்டிய நேரம் இதுவாகும். இச்சட்டம் எப்போதும் அரசின் அதிகாரத்துவம்சார் நலன்களைப் பாதுகாப்பதற்காகப் பிரயோகிக்கப்பட்டதே தவிர, மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்பதையே கடந்தகால அனுபவங்கள் வெளிப்படுத்துகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதுடன், அது நீக்கப்படும் வரை அச்சட்டத்தைப் பிரயோகிப்பதற்கு இடைக்காலத்தடை விதிக்கப்படவேண்டும். அதேபோன்று அச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்குப் புதியதொரு சட்டத்தை உருவாக்கவேண்டிய அவசியமில்லை.

அத்தோடு நடமாடுதல், கூட்டங்களை நடத்துதல், ஒன்றுகூடுதல், பேரணி, ஊர்வலம் அல்லது போராட்டம் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தல் என்பவற்றுக்கான சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் அல்லது ஜனாதிபதிக்கு (நிறைவேற்றதிகாரத்துக்கு) அதிகாரங்களை வழங்கக்கூடிய சட்டங்களை இயற்றக்கூடாது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள சகலருக்குமான நீதி பெற்றுக்கொடுக்கப்படுவதை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டு குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்படாதவர்களுக்கு அரசினால் இழப்பீடு வழங்கப்படவேண்டும் என அக்கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.