நாட்டில் அதிகரித்துள்ள நோய் நிலைமைகள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. டெங்கு, சிக்கன்குன்னியா மற்றும் கொவிட் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் மக்கள் உரிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவேண்டியது அவசியம் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் திங்கட்கிழமை (02) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் அதிகரித்துள்ள நோய் நிலைமைகள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
டெங்கு, சிக்கன்குன்னியா மற்றும் கொவிட் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. தொற்றுநோய் தடுப்பு பிரிவுடன், மருத்துவ ஆராய்ச்சி ஸ்தாபனம் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
இவை தொடர்பான தரவுகளை நாளாந்தம் சுகாதார அமைச்சின் ஊடாக ஊடகங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மக்களின் சுகாதார பாதுகாப்பிற்கான எடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் தாமதமின்றி முன்னெடுப்போம். நோய் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு சுகாதார அமைச்சு மக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்கும்.
எவ்வாறிருப்பினும் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு உரிய சுகாதார பாதுகாப்பு நடமுறைகளைப் பின்பற்றுவதும் அத்தியாவசியமானதாகும். உலகில் கொவிட் பரவல் வேகத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு அவதானத்துடன் இருக்கிறது.
இதற்கு முன்னர் உலகளாவிய தொற்று நிலைமையின்போது செயற்பட்ட அனுபவம் சுகாதாரத்துறையினருக்கு காணப்படுகிறது.
உலக சுகாதார ஸ்தாபனம் அந்தந்த நாடுகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. எனவே மக்கள் அநாவசியமாக அச்சமடையத் தேவையில்லை. அதேவேளை இது தொடர்பில் கவனயீனமாக செயற்படவும் தேவையில்லை என்றார்.

