லங்கா ரி10 லீக்கில் பங்குபற்றும் கோல் மாவல்ஸ் அணியின் இந்திய உரிமையாளர் பிரேம் தக்கருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை விதிகளுடன் தொடர்புபட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டத்தின்கீழ், போட்டி நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து தக்கருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தக்கருக்கு 60 இலட்சம் ரூபா அபராத்தை விதித்த கண்டி மேல் நீதிமன்றம், 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டது.
தற்போது நடைபெற்றுவரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக தக்கரின் கையடக்க தொலைபேசியின் தரவுகளை பதிவிறக்கம் செய்து ஆய்வு நடத்த அனுமதிக்குமாறு ஐசிசி ஊழல் ஒழிப்பு பிரிவு விடுத்த வேண்டுகோளுக்கு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
காலி மாவல்ஸ் அணியினர் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விளையாடிய லங்கா ரி10 லீக் போட்டி ஒன்றின் முடிவை பாதிக்கச் செய்யும் வகையில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அண்ட்றே ப்ளெச்சருக்கு ஊக்கத்தொகை வழங்கி மோசடி செய்ய முயற்சித்ததாக தக்கருக்கு எதிராக இந்த வருட ஆரம்பத்தில் சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

