எமக்கு உடனடியாக உதவிகளைச் செய்யும், எமக்கு மிகவேண்டப்பட்ட நாடாக இந்தியா இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.
மனிதாபிமான உதவிகளை வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (28) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
“முல்லைத்தீவில் நான் மாவட்டச் செயலராக பணியாற்றிய அனுபவம் எனக்குள்ளது. இங்கு உள்ள கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எனக்கு நன்றாக தெரியும். போருக்குப் பிறகு சட்டவிரோத மீன்பிடி உங்கள் வாழ்வை பாதித்தது. இன்று இந்திய அரசு மற்றும் மக்களிடமிருந்து பெறுமதியான வலைகளும், குளிர்சாதன பெட்டிகளும் கிடைக்கின்றன.”
அதிகமாக இந்தியாவின் வீடமைப்பு திட்டம், ரயில் பாதை புனரமைப்பு, மற்றும் தற்போது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை புனரமைப்பை எடுத்துக்காட்டினார். “இந்தியா தொடர்ந்து எமக்கான உதவிகளை வழங்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திலகநாதன் மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ. உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.








