போர்க்குற்றங்களுக்காக படையினர் கைதுசெய்யப்படவில்லை: சந்திரிக்கா

248 0

இலங்கையில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்படுவதற்கு போர்க் குற்றங்கள் காரணமில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தத்தில் பங்கேற்றமைக்காக எந்த இராணுவத்தினரும் கைது செய்யப்படவில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் நீதிக்குப் புறம்பாக நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் எதிரிகளின் படுகொலைகளில் தொடர்புபட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் அவர்கள் கைது செய்யப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோரைக் கொண்ட தேசிய பாதுகாப்புச் சபை தொடர்ச்சியாக கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும், கட்சிகள் மற்றும் தரப்புகளின் அறிக்கைகள் தொடர்பாகவும் விவாதிக்கின்றது.

தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களை நல்லிணக்கத்தின் மூலமே தடுக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், இதனை இப்போது நாம் செய்யாவிட்டால், எதிர்காலத்தில் இன்னொரு போரை எதிர்கொள்ள நேரிடலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ள அவர், நல்லிணக்கம் மட்டுமே இன்னொரு ஈழக் கோரிக்கையைத் தடுக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.