சொந்த மண்ணில் சுதந்திரமின்றி வாழும் முள்ளிக்குளம் மக்கள்

281 0

தொடர் போராட்டத்தின் பின்னர் முள்ளிக்குள மக்களிள் குடியமர்த்தப்பட்ட போதும் சுயமாக குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் தவராசா தெரிவித்தார்.

38 நாட்கள் தொடர் போராட்டத்தின் பின்னர் காணிகள் விடுவிக்கப்பட்டு, மக்கள் அங்கு சென்று 10 நாட்கள் கடந்துள்ளன. எனினும் அவர்கள் சொந்த காணிகளில் சுயமாக குடியமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிக்குளம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்ட இடங்களில் இரண்டு நாட்களின் பின்னர் அவர்கள் தாம் விரும்பிய இடங்களில் குடியமர முடியும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் 10 நாட்களாகியும் தாமதமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை மக்களுக்கு நம்பிக்கை அற்ற தன்மையை உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அந்த மக்கள் முள்ளிக்குளம் ஆலயத்தில் இருக்கின்றார்கள். இங்கு 10 நாட்கள் இருப்பது என்பது அசௌகரியமானது. தமது சாதாரண வாழ்க்கையை வாழ முடியாத நிலையில் அந்த மக்கள் உள்ளனர்.

மேலும் ஆலயத்தின் புனித தன்மைக்கு ஏற்ப அதனையும் அவர்கள் கவனித்து வருகின்றமையினால் மக்கள் ஒரு சுதந்திரமற்ற முறையில் ஆலயத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த மக்களுக்கு போதியளவு மலசலகூட வசதிகள், குடிநீர் வசதிகள் உட்பட எவ்வித தேவைகளும் இதுவரை ஏற்படுத்திக் கொடுக்கப்படாத நிலையில் மக்கள் தொடர்ந்தும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

அந்த மக்கள் தமது சொந்த காணிகளில் சிறிய கொட்டில்களை அமைத்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றார்கள்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக அவர்களின் காணிகளில் குடியமருவதற்கு உடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

முள்ளிக்குளம் மக்கள் வசித்து வந்த மலங்காடு கிராமத்திற்கு செல்வதற்கு சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஏற்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கடற்படை தளபதி வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

எனவே இவ்விடயம் தொடர்பில் உயர் அதிகாரிகள் துரித கதியில் செயற்பட்டு இந்த மக்களின் குறையை தீர்த்து, அந்த மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவும், இன்னும் விடுவிக்கப்பட உள்ள காணிகள் வெகு விரைவில் விடுவிக்கப்பட்டு முள்ளிக்குளம் மக்கள் தமது வாழ்வை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

எனவே உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வை பெற்று மக்களின் மகிழ்ச்சியான மீள் குடியேற்றத்திற்கு ஆவணம் செய்யுமாறு கோரிக்கை விடுப்பதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் தவராசா மேலும் தெரிவித்தார்.