ஏமனில் காலரா நோய் தாக்கி 34 பேர் பலி

238 0

ஏமன் நாட்டில் காலரா நோய் தாக்கி 34 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏமன் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக காலரா நோய் பாதிப்பு அதிக அளவில் காணப்பட்டு வந்தது. ஏராளமானோர் காலரா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், ஏமனில் காலரா நோய் தாக்கி 34 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “காலரா நோய் தாக்கி 34 பேர் உயிரிழந்துள்ளனர். 9 மாகாணங்களில் 2,022 பேர் வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 27 முதல் மே 7 வரை இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
இந்த ஆண்டில் மட்டும் இரண்டாவது முறையாக காலரா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக மருத்துவமனைகள் அழிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் உணவு மற்றும் தூய்மையான குடிநீர் கிடைக்கப்பெறாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உலக அளவில் சிரியா, தெற்கு சூடான், நைஜீரியா மற்றும் ஈராக் நாடுகளை போல் மனிதாபிமான அவசர நிலை உள்ள நாடாக ஏமன் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சவுதி தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஏமனில் பதற்றமான சூழல் காணப்பட்டு வருகிறது.