மெக்சிகோ பட்டாசு குடோனில் வெடிவிபத்து: 14 பேர் பலி

247 0

மெக்சிகோவில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில், அங்கு வேலை செய்துகொண்டிருந்த 14 பேர் பலியாகி உள்ளனர்.

மெக்சிகோ நாட்டின் மத்திய பியூப்லா மாநிலம், சான் இசிட்ரோ கிராமத்தில் திருவிழாவிற்காக ஏராளமான பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைக்கான வெடிபொருட்களை ஒரு குடோனில் வைத்திருந்தனர். விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று இரவு திடீரென பட்டாசுகள் வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து நாலாபுறமும் சிதறி பொதுமக்கள் மீது விழுந்தது.

தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 14 பேர் பலியாகி உள்ளதாகவும், 22 பேர் பலத்த காயம் அடைந்ததாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.