ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த குர்திஸ் படையினருக்கு அமெரிக்கா உதவி

239 0

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துகின்ற குர்திஸ் படையினருக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கவுள்ளது.

இதற்கான ஒப்புதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கி இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் அறிவித்துள்ளது.

சிரிய ஜனநாயக போராளிகளின் அங்கமான குர்திஸ் படையினருக்கு, ராக்கா பிராந்தியத்தில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை வெளியேற்றுவதற்காக இவ்வாறு ஆயுதங்கள் வழங்கப்படவுள்ளன.

எவ்வாறாயினும் இந்த விடயத்துக்கு துருக்கி எதிர்ப்பை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குர்திஸ் படையினரையும் தீவிரவாதிகள் என்ற கோணத்திலேயே பார்க்கும் துருக்கி, சிரியாவில் அவர்கள் அதிக நிலங்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை தடுக்க முயற்சிக்கிறது.

இந்த விடயம் குறித்தும் அமெரிக்கா அவதானம் செலுத்தி இருப்பதாக, அமெரிக்க பாதுகாப்பு தலைமையகத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர், துருக்கியின் பாதுகாப்பு செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் துருக்கியின் தரப்பில் இன்னும் எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.