அரசை வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் -பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச

251 0

மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் இந்த அரசை வெகுவிரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சி அமையும் நாள் விரைவில் வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தேசிய அரசுக்கு அக்கறையில்லை. முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பைக் குறைப்பதன் மூலம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியாது.

மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கி ஆட்சி செய்யப் பார்க்கின்றனர். நாட்டில் உள்ள அனைத்துத் தொழில்துறையினரும் இன்று வீதியில் உள்ளனர்.

இராணுவத்தினர், பிக்குகள், பல்கலைக்கழக மாணவர்கள் என்று அனைவர் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர். நாட்டின் சட்டம், ஒழுங்கு தொடர்பில் பேசும் அமைச்சர்களின் செயற்பாட்டைப் பார்த்தால் மக்களுக்கு நன்கு தெரியும்.

மக்களின் ஜனநாயக உரிமையான உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தப் பயப்படுகின்றனர். இவர்கள் 2020 வரை ஒருபோதும் தேர்தலை நடத்தப் போவதில்லை.

இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு விரைவில் அமையும்.

அதற்கு மக்கள் முழுமையாக அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். அதன் காரணமாக இந்த அரசு தேர்தலை நடத்தப் பயப்படுகின்றது.

விரைவில் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு அமையும். அதனை அவர்களால் தடுக்க முடியாது” என மேலும் தெரிவித்துள்ளார்.