ரோஹிங்கிய அகதிகள் அவர்களது நாட்டில் முகங்கொடுக்கக்கூடிய வலிந்து காணாமலாக்கப்படல் அச்சுறுத்தல் தொடர்பில் முறையானதும், தெளிவானதுமான மதிப்பீட்டை மேற்கொள்ளாமல், அவர்களை மீண்டும் அந்நாட்டுக்குத் திருப்பியனுப்பமுடியா தென அரசாங்கத்திடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
முல்லைத்தீவு விமானப்படை முகாமுக்குள் உள்ள தடுப்பு நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அமுலாக்கம் தொடர்பில் ஆராயும் நோக்கில் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும், அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சார்பில் தவிசாளர் எல்.ரி.பி.தெஹிதெனிய மற்றும் ஆணையாளர்களான பேராசிரியர் பர்ஸானா ஹனீபா, கலாநிதி கெஹான் குணதிலக ஆகியோரும், அரசாங்கத்தின் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் மற்றும் விமானப்படை ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது ரோஹிங்கிய அகதிகள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தடுப்புநிலையம் தற்காலிகமானது அல்ல எனவும், மாறாக உரிய சட்டத்தின்கீழ் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையான தடுப்பு நிலையம் எனவும் தெளிவுபடுத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், அந்நிலையத்துக்கான முழுப்பொறுப்பும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் வசமே இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அதேவேளை ரோஹிங்கிய அகதிகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு சிவில் சமூக அமைப்புக்களும், உதவி வழங்கல் முகவரகங்களும் தயாராக இருப்பதாகவும், அவ்வாறு வழங்கப்படும் உதவிகள் உரிய தரநியமங்களுக்கு அமைவாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கென குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரத்யேக பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவேண்டும் எனவும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
அதற்குப் பதிலளித்த அரசாங்கத்தின் பிரதிநிதிகள், அவ்வாறானதொரு பிரிவு ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாகவும், அண்மையில் ரோஹிங்கிய அகதிகளைப் பார்வையிடுவதற்கு செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினர்.
அதேபோன்று குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு அவசியமான உதவிகள், பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு என்பன தொடர்பில் இச்சந்திப்பின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதனை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்திய பரிந்துரைகளும் ஆணைக்குழு அதிகாரிகளால் முன்மொழியப்பட்டன.
அத்தோடு குறித்தவொரு நாட்டில் வலிந்து காணாமலாக்கப்படல் அச்சுறுத்தல் நிலவும் பட்சத்தில், எந்தவொரு நபரையும் அந்நாட்டுக்குத் திருப்பியனுப்பக்கூடாது எனும் கடப்பாட்டை அரசாங்கத்துக்கு நினைவுறுத்திய ஆணைக்குழுவின் அதிகாரிகள், எனவே ரோஹிங்கிய அகதிகள் அவர்களது நாட்டில் முகங்கொடுக்கக்கூடிய வலிந்து காணாமலாக்கப்படல் அச்சுறுத்தல் தொடர்பில் முறையானதும், தெளிவானதுமான மதிப்பீட்டை மேற்கொள்ளாமல், அவர்களை மீண்டும் அந்நாட்டுக்குத் திருப்பியனுப்பமுடியாது என அறிவுறுத்தினர்.

