திறந்த அரசாங்க ஒத்துழைப்பு செயன்முறையில் பங்கேற்பதற்கான அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாகத் தவறிவருவது குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் சிவில் சமூக அமைப்புக்கள், மீண்டும் அச்செயன்முறையில் துடிப்புடன் இயங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளன.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் திறந்த அரசாங்க ஒத்துழைப்பு செயன்முறையில் (‘திறந்த அரசாங்க ஒத்துழைப்பு செயன்முறை’ என்பது வலுவான மறுசீரமைப்புக்களுடன்கூடிய முற்போக்கு செயற்திட்டங்களை உருவாக்குவதில் அரசாங்கங்கள் சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து செயலாற்றுவதாகும்) பங்களிப்புச்செய்யும் சிவில் சமூக அமைப்புக்களின் இணை ஒருங்கிணைப்பாளர்கள் என்ற ரீதியில் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா மற்றும் சர்வோதய இயக்கம் ஆகிய அமைப்புக்களால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
திறந்த அரசாங்க ஒத்துழைப்பு செயன்முறையில் பங்கேற்பதற்கான அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாகத் தவறிவருவது குறித்து தீவிர கரிசனையடைகிறோம். இது திறந்த அரசாங்க ஒத்துழைப்பு செயன்முறையில் அரசாங்கத்தின் உறுப்புரிமையை வலுவிழக்கச்செய்வதுடன் மக்களின் அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதாகவும், கூட்டுமுயற்சியின் ஊடாக சிறந்த ஆட்சியியல் நிர்வாகம் மற்றும் அபிவிருத்தியை ஊக்குவிப்பதாகவும் அரசாங்கத்தினால் அதன் கொள்கையின் அடிப்படையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு முற்றிலும் முரணானதாகவும் அமையும்.
பொது விடயங்களில் மக்களின் பங்கேற்புடன் வெளிப்படைத்தன்மை வாய்ந்த, சகலரையும் உள்ளடக்கிய, பொறுப்புக்கூறத்தக்க ஆட்சி நிர்வாகத்தைக் கட்டியெழுப்புவதற்கு பல்தரப்புப் பங்காளிகளை உள்ளடக்கிய திறந்த அரசாங்க ஒத்துழைப்பு செயன்முறை இன்றியமையாததாகும். உலகளாவிய ரீதியில் 70 க்கும் மேற்பட்ட நாடுகளும், 1000 க்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புக்களும் திறந்த அரசாங்க ஒத்துழைப்பு செயன்முறையில் அங்கம்வகிக்கின்றன.
அந்த உறுப்புநாடுகள் சிவில் சமூக அமைப்புக்களுடன் இணைந்து இரு வருடங்களுக்கு ஒருமுறை ஆட்சியியல் மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தேசிய செயற்திட்டத்தைத் தயாரிக்கவேண்டும். அதற்கமைய 2015 ஆம் ஆண்டு திறந்த அரசாங்க ஒத்துழைப்பு செயன்முறையில் இணைந்துகொண்ட இலங்கை, இதுவரையில் சிவில் சமூகங்களுடன் இணைந்து தயாரித்த இரண்டு தேசிய செயற்திட்டங்களை சமர்ப்பித்திருக்கிறது.
இருப்பினும் முன்னைய அரசாங்கம் கடந்த 2021, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக தேசிய செயற்திட்டத்தை சமர்ப்பிப்பதற்குத் தவறியதன் விளைவாக, திறந்த அரசாங்க ஒத்துழைப்பு செயன்முறையின் ஒருங்கிணைப்புக்குழு கடந்த ஆண்டு மேமாதம் 10 ஆம் திகதி இலங்கையை ‘இயங்குகை அற்ற உறுப்பினராக’ அடையாளப்படுத்தி தீர்மானமொன்றை நிறைவேற்றியது.
‘இயங்குநிலை உறுப்பினர்’ அந்தஸ்த்தை மீளப்பெறுவதற்கு ஒரு வருடகாலத்தினுள் உரிய நியமங்களுக்கு ஏற்றவாறான தேசிய செயற்திட்டத்தை இலங்கை சமர்ப்பிக்கவேண்டும்.
எனவே திறந்த அரசாங்க செயன்முறையில் மீண்டும் அர்த்தமுள்ள விதத்தில் இணைந்து செயலாற்றுவதற்கும், ஆட்சியியல் நிர்வாகம் தொடர்பில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குமான வாய்ப்பு தற்போதைய அரசாங்கத்துக்கு இருக்கிறது. எனவே அதனை முன்னிறுத்திய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

