அமெரிக்க சக்தி திணைக்களம் / தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்தின் அணுக்கடத்தல் கண்டறிதல் மற்றும் தடுப்பு அலுவலகத்தினால் அதன் மெகாபோர்ட்ஸ் முன்னெடுப்பின் (Megaports Initiative) ஊடாக வழங்கப்பட்ட புதிய கதிர்வீச்சு கண்டறியும் கருவியினை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலீ சங் கொழும்பு துறைமுகத்தில் கடந்த மார்ச் 28ஆம் திகதி செயற்பாட்டுக்கு இணைத்து வைத்தார்.
தெற்காசியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கொள்கலன் சார்ந்த வர்த்தகத்தின் பெரும்பகுதியை கொழும்பு துறைமுகம் கையாள்கிறது.
இலங்கையின் தேசிய துறைமுக பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உதவியும், உலகளாவிய விநியோக சங்கிலி பாதுகாப்பை பலப்படுத்தியும் மற்றும் அச்சுறுத்தல்கள் அமெரிக்காவையோ அல்லது சர்வதேச கரையோரங்களையோ அடைவதற்கு முன்பே இடைத்தங்கல் மையங்களில் அவற்றை கண்டறிவதன் மூலம் அமெரிக்காவின் பாதுகாப்பு வீச்செல்லைகளை விரிவுப்படுத்தியும் ஏறக்குறைய 5 இலட்சம் அமெரிக்க டெலர்கள் (148 மில்லியன் ரூபா) பெறுமதியான இந்த கருவியானது கொழும்பு துறைமுறைகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தில் கதிரியக்கப் பொருட்களின் இருப்பைக் கண்டறிவதற்கும் அதிகாரிகளை எச்சரிக்கை செய்வதற்கும் பயன்படுத்தப்படும்.
இலங்கை சுங்கத் திணைக்களம், இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் இலங்கை அணுசக்தி சபை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டதுடன், இலங்கை பயிற்றுனர்களுக்கும் பராமரிப்பு தொழில்நுட்பவியலாளர்களுக்கும் பயிற்சியளிப்பதற்காக அமெரிக்க நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றினர்.
2004ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதில் இருந்து அமெரிக்காவும் இலங்கையும் கொழும்பு துறைமுகத்தின் ஊடாக அணு மற்றும் ஏனைய கதிரியக்கப் பொருட்களின் பரவலை தடுப்பதற்காக மெகாபோர்ட்ஸ் முன்னெடுப்பின் ஊடாக நெருங்கி பணியாற்றி வந்துள்ளன.
இந்த பங்காண்மையின் உறுதித்தன்மையை சுட்டிக்காட்டி இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலீ சங் கருத்து வெளியிடுகையில்,
“அணுசக்தி கடத்தல்களுக்கு எதிரான போராட்டத்தில் எமது நீண்டகால பங்காண்மையாளர்களில் ஒருவராக இலங்கை இருக்கிறது.
2004ஆம் ஆண்டில் இருந்து 31 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் (9 பில்லியன் ரூபாவுக்கும்) அதிகமான தொகை முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், உலகின் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் வர்த்தக பாதைகளில் ஒன்றைப் பாதுகாப்பதற்கான இலங்கையின் திறனை இந்த மெகாபோர்ட்ஸ் முன்னெடுப்பு வலுப்படுத்தியுள்ளது.
அணுசக்தி பொருட்களின் பரவலை தடுத்தும் ஆபத்தான பொருட்கள் எல்லைகளை கடப்பதற்கு முன்னதாக அவற்றை கண்டறிந்தும் உலகளாவிய விநியோக சங்கிலிகளை பாதுகாப்பதற்கான எமது 20 ஆண்டு கால பங்காண்மை மற்றும் பொதுவான உறுதிப்பாட்டில் கொழும்பு துறைமுகத்திலான இந்த ஆரம்பமானது மேலுமொரு மைல்கல்லை குறிக்கிறது” என்று தெரிவித்தார்.
அமெரிக்க மெகாபோர்ட்ஸ் முன்னெடுப்பு பற்றி…
2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த மெகாபோர்ட்ஸ் முன்னெடுப்பானது அமெரிக்காவின் சக்தி திணைக்களம்/தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்தினால் (DOE/NNSA) வழிநடத்தப்படுகிறது.
இது சர்வதேச கப்பற்துறை துறைமுகங்கள் ஊடாக அணு மற்றும் பிற கதிரியக்கப் பொருட்களின் சட்டவிரோத கடத்தலைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட உலகளாவிய நிகழ்ச்சித்திட்டமொன்றாகும்.
இந்த வசதிகளை கொண்டிருக்கும் நாடுகளுடன் பங்காண்மையுடன் பணியாற்றுவதன் மூலம் இந்த முன்னெடுப்பானது, நவீன கதிர்வீச்சு கண்டறிதல் கருவிகளை நிறுவுதல் மற்றும் சுங்க மற்றும் துறைமுக அதிகாரிகளை பயிற்றுவித்தல் போன்ற நடவடிக்கைகளினூடாக உலகளாவிய பாதுகாப்பை பலப்படுத்துகிறது.
சட்டபூர்வமான உலகளாவிய வர்த்தகத்தின் இயக்கத்தை பாதுகாக்கும் அதேநேரம், அணுசக்தி கடத்தலை கண்டறிவதற்கும் தடுப்பதற்கும் உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளுடன் பங்காண்மையை ஏற்படுத்துவதன் மூலம் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்தின் மெகாபோர்ட்ஸ் முன்னெடுப்பானது அமெரிக்காவை பாதுகாப்பானதாகவும் பலமானதாகவும் மற்றும் மேலும் செழுமையானதாகவும் மாற்ற உதவுகிறது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலீ சங் இலங்கை துறைமுக அதிகார சபை, இலங்கை சுங்கத் திணைக்களம், இலங்கை அணுசக்தி சபை, கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் மற்றும் அமெரிக்க சக்தி திணைக்கள அதிகாரிகளுடன் இருப்பதை இங்கு காணலாம்.

மேற்கு கொள்கலன் முனையத்தில் புதிதாக செயற்பாட்டுக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட கதிர்வீச்சு கண்டறியும் கருவியினை வாகனமொன்று நெருங்குவதை இங்கு காணலாம்.

அமெரிக்க தூதுவர் ஜூலீ சங் கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி முனிஷ் கன்வாருடன் இணைந்து முனையத்தின் கட்டுபாட்டு அறையை பார்வையிடுவதை இங்கு காணலாம்.

