RIMESஇன் பணிகள் பாராட்டத்தக்கது

72 0

இலங்கை சமூகத்தை அனர்த்த அபாயங்களிலிருந்து பாதுகாப்பதிலும், பேண்தகு அபிவிருத்திக்கு உதவுவதிலும் RIMES மேற்கொண்டுவரும் பணிகள் பாராட்டத்தக்கது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்டலில் இன்று (8) நடைபெற்ற ஆபிரிக்கா மற்றும் ஆசியாவிற்கான பிராந்திய கூட்டு பல் அனர்த்த முன்னெச்சரிக்கை முறைமையின் (RIMES)  நான்காவது அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகள் முக்கியமாக முகங்கொடுக்கும் ஆபத்துக்கள் பற்றி கண்காணித்தல், மதிப்பீடு செய்தல், தொடர்பாடல்களை மேற்கொள்ளுதல் மற்றும் முடிவுகளை எடுப்பதற்காக அந்த தகவல்களை பயன்படுத்துவதை எளிதாக்குவதற்காக 2009 ஏப்ரல் 30ஆம் திகதி ஆபிரிக்கா மற்றும் ஆசியாவுக்கான பிராந்திய கூட்டு பல் அனர்த்த முன்னெச்சரிக்கை முறைமை (RIMES)  நிறுவப்பட்டது.

அங்கு பிரதமர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

2017ஆம் ஆண்டு பப்புவா நியூ கினியாவில் நடைபெற்ற மூன்றாவது அமைச்சர்கள் மாநாட்டில், RIMESஇன் நான்காவது அமைச்சர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்டது.

உலகளாவிய COVID-19 தொற்றுநோய் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு சவால்கள் காரணமாக இந்த மாநாடு இதுவரை ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், இன்று இந்த வாய்ப்பை நனவாக்க குறிப்பாக RIMES உட்பட காணி மற்றும் நீர்ப்பாசனம், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வழங்கிய ஆதரவை நாம் பாராட்ட வேண்டும்.

இயற்கை அனர்த்தங்களில், 2004இல் நாம் சந்தித்த சுனாமி பேரனர்த்தமானது அண்மைய வரலாற்றில் நாம் சந்தித்த மிக மோசமான ஒரு அனர்த்தமாகும். அந்தப் பேரழிவு சுமார் 40,000 பேரின் உயிர்களை காவுகொண்டது. இந்த பேரழிவு நாட்டிற்கு ஏற்படுத்திய பொருளாதார மற்றும் சமூக வீழ்ச்சியையும், பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களை இழந்த பிள்ளைகளின் வலியையும் நாம் இன்னும் தாங்கிக்கொண்டிருக்கிறோம்.

இதுபோன்ற சூழ்நிலைகளில், இலங்கை சமூகத்தை அனர்த்த அபாயங்களிலிருந்து பாதுகாப்பதிலும், பேண்தகு அபிவிருத்திக்கு உதவுவதிலும் RIMES மேற்கொண்டுவரும் பணிகள் பாராட்டத்தக்கது.

இதுபோன்ற சமூகப் பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்ற RIMES அமைப்பின் முயற்சிகளுக்கு நான் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, முழு இலங்கை மக்களினதும் உலகளாவிய சமூகத்தினதும் நலனுக்காக இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம் என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, தூதுவர்கள், RIMES உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சுக்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.