3.1 சதவீதமாக பொருளாதார வளர்ச்சியை வரையறுப்பதற்கு வெட்கமில்லையா? – ஹர்ஷ டி சில்வா கேள்வி

71 0

பொருளாதார வளர்ச்சியை 3 முதல் 3.1  சதவீதத்துக்கு வரையறுப்பதாக குறிப்பிடுவதற்கு அரசாங்கத்தின் 159 உறுப்பினர்களுக்கு வெட்கமில்லையா? இதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின்  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கான பெருமையை கடந்த அரசாங்கத்துக்கு வழங்குங்கள். பணவீக்கம் மற்றும் வட்டி வீதம் கடந்த அரசாங்கத்தின் காலத்திலேயே குறைவடைந்தது. ஆகவே உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். பொய்யுரைக்காதீர்கள் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8)  நடைபெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ‘அ’ அட்டவணையின் ஒழுங்குவிதிகளின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பில்  பிரசுரிக்கப்பட்ட  வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளதாகவும், பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் குறைவடைந்துள்ளதாகவும், மக்கள் சுகபோகமாக வாழ்வதாகவும் நிதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும குறிப்பிட்டார்.

2025ஆம்  ஆண்டு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தால் உயர்வடையும் என்று கடந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாக வரையறுக்கப்படும் என்று குறிப்பிடப்படுகிறது. பொருளாதார ஸ்திரப்படுத்தலை  உறுதிப்படுத்தாவிடின் அரசாங்கம் என்பதொன்று இருப்பது பயனற்றது.

சமூக கட்டமைப்பில் ஏழ்மை 33 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. பொருளாதாரம் வளர்ச்சியடையாவிடின் எவ்வாறு புதிய தொழில்  வாய்ப்புக்களை உருவாக்கிக்கொள்வது? பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்திக் கொண்டிருந்தால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பொருளாதாரம் வளர்ச்சிப் பெற்றிருக்க வேண்டுமே? பொருளாதார வளர்ச்சி 3 சதவீதம் என்று இலக்கிடப்பட்டால் அரசாங்கம் தனது பொருளாதார கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி நோக்கிச் செல்வதாயின் எந்த வகையிலான பொருளாதார கொள்கையை செயற்படுத்த வேண்டும் என்பது அரசாங்கத்துக்கு தெரியாது. இதுதான் அடிப்படை பிரச்சினையாகும். பொருளாதாரம் தொடர்பில் நாட்டுக்கு  பாரிய வாக்குறுதிகளை வழங்கினீர்கள.

2028ஆம் ஆண்டு இலங்கையை அபிவிருத்தியடையும் நாடு என்ற நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டுமாயின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8 சதவீதத்தால் உயர்வடைய வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த கூற்றுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி அவரை பார்த்து சிரித்தீர்கள்.

பொருளாதார வளர்ச்சியை 3 முதல் 3.1  சதவீதத்துக்கு வரையறுப்பதாக குறிப்பிடுவதற்கு அரசாங்கத்தின் 159 உறுப்பினர்களுக்கு வெட்கமென்பது இல்லையா, அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். 159 உறுப்பினர்களுக்கும் சவால் விடுக்கிறேன்.

பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கான பெருமையை கடந்த அரசாங்கத்துக்கு வழங்குங்கள். பணவீக்கம் மற்றும் வட்டி வீதம் கடந்த அரசாங்கத்தின் காலத்திலேயே குறைவடைந்தது. ஆகவே உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள். பொய்யுரைக்காதீர்கள்.

பொருளாதாரம் குறித்து எவ்விதமான தெளிவும் இல்லாத காரணத்தால் சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து பரிந்துரைகளுக்கும் அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கிறது. இதற்கமைவாகவே மின்கட்டணத்தை  அதிகரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பொய் என்று முடிந்தால் குறிப்பிடுங்கள். இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஆலோசனைகளை கருத்திற்கொள்ளாமல் சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானங்களை அரசாங்கம் முழுமையாக ஏற்கிறது. இந்த நாட்டுக்கு கடவுள் துணை என்றார்.