வியட்நாம் பௌத்த சங்கமே ஜனாதிபதிக்கு தனிப்பட்ட ஜெட்டை வழங்கியது!-விஜித்த ஹேரத்

66 0

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இலங்கைக்கு திரும்புவதற்கு வியட்நாம் பௌத்த சங்கம்தான்  தனிப்பட்ட ஜெட் விமானத்தை  ஏற்பாடு செய்து செலவுகளை ஏற்றுக்கொண்டது. அரசாங்கத்தின் செலவில் ஜனாதிபதி ஜெட் விமானத்தில் நாடு திரும்பினார் என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8)  நடைபெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ‘அ’ அட்டவணையின் ஒழுங்குவிதிகளின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில்   உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷண ராஜகருண ஜனாதிபதியின் வியட்நாம் விஜயம் குறித்து முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருண தொடர்ந்து உரையாற்றுகையில்,

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி  61 சதவீத வாக்கினை பெற்று ஆட்சியமைத்தது. ஆனால்  தற்போது நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  தேசிய மக்கள் சக்தி 43 சதவீதமான வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளது.

குறுகிய அரசியல் வெற்றிக்காக மக்கள் மத்தியில் குறிப்பிட்ட பொய் மற்றும் போலியான வாக்குறுதிகளை அரசாங்கத்தால் இன்று ஏற்றுக்கொள்ள முடியாது.  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தேர்தல் பிரச்சார மேடையில் வைத்து ஏப்ரல்  21ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த  ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அறிவிப்பதாக குறிப்பிட்டார். அறிவித்தாரா? ஒன்றுமில்லை.

ஜனாதிபதி ஒருவரால் இவ்வாறு பொய்யுரைக்க முடியுமா? தேசிய மக்கள் சக்தியின்  பொய் மற்றும்  வெறுப்பினை நாட்டு மக்கள் குறுகிய  காலத்துக்குள் நன்கு  விளங்கிக் கொண்டுள்ளார்கள். அதன் வெளிப்பாடாகவே  இந்த பெறுபேறுகள் காணப்படுகிறது. ஆகவே இனியாவது பெரும்பான்மை உள்ளது என்று குறிப்பிட்டுக்கொண்டு தான்தோன்றித்தனமாக செயற்படுவதையும் பேசுவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் வியட்நாம் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அந்த விஜயத்தை நிறைவு செய்ததன் பின்னர் ஜனாதிபதி  தனிப்பட்ட ஜெட் விமானத்தில் இலங்கைக்கு வந்துள்ளார்.

இந்த தனிப்பட்ட ஜெட் விமானத்துக்கான செலவை வியட்நாம் அரசாங்கம்  ஏற்றுக்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மறுபுறம்  வியட்நாம் நாட்டின் வர்த்தக சங்கம் ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஆகவே உண்மை என்னவென்பதை அரசாங்கம்  வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து எழுந்து  உரையாற்றிய வெளிவிவகாரத்துறை அமைச்சர்  விஜித்த ஹேரத்,  வியட்நாம் ஜனாதிபதியின் அழைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் உற்சவம் வியட்நாம் நாட்டில் நடைபெற்றதால்  அந்த அழைப்பை ஏற்று வியட்நாம் நாட்டுக்கு சென்றோம்.

கடந்த செவ்வாய்க்கிழமை (6) காலையில் தான் வெசாக் உற்சவம் நடைபெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தான் விசேட உரையாற்றினார்.

6ஆம் திகதி காலையில்  அந்த விசேட உற்சவத்தில் கலந்துகொண்டதன்  பின்னர்  இலங்கைக்கு மீண்டும் திரும்புவது கடினம் என்று குறிப்பிட்டோம். இதனை கருத்திற்கொண்டு வியட்நாம் பௌத்த சங்கம் ஜனாதிபதிக்கு விசேட விமானத்தை ஏற்பாடு செய்து செலவுகளை ஏற்றுக்கொண்டது. இலங்கை ஒரு சதம் கூட செலவு செய்யவில்லை.  நாடு திரும்பலுக்கான செலவுகள் மிகுதியாகியுள்ளன. ஆகவே, ஜெட் விமானத்துக்கு இலங்கை அரசாங்கம் செலவு செய்யவில்லை என்றார்.