முதலாம் காலாண்டுக்கான அரச நிதிச் செயலாற்று தொடர்பான அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முதலாம் காலாண்டில் 1064 பில்லியன் வருமானம் கிடைத்துள்ளதோடு, 1562 பில்லியன் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க அரச நிதி முகாமைத்துவச் சட்டத்தின் 53(1) பிரிவுக்கமைய, குறைந்தபட்சம் காலாண்டு அடிப்படையில் நிதி விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அரச வருமானம் மற்றும் செலவு உள்ளிட்ட நிதிச் செயலாற்றுகை தொடர்பான கூற்றொன்று காலாண்டு முடிவடைந்து 45 நாட்களுக்கு விஞ்சாத காலப்பகுதியில் அமைச்சரவைக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
குறித்த ஏற்பாடுகளுக்கமைய 2025.03.31 திகதியுடன் முடிவடைகின்ற 2025ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்கான நிதிச் செயலாற்றுகைக் கூற்று 2025.05.15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
அதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்த 2025ஆம் ஆண்டு வருடாந்த வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் குறிப்பிட்டுள்ளவாறான வகைப்படுத்தல்களின் அடிப்படையில் 2025.01.01 தொடக்கம் 2025.03.31 வரையான 2025ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுக்குரிய அனைத்து விசேட செலவு அலகுகள் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்கள் மூலம் அறிக்கைப்படுத்தப்பட்ட திரண்ட வருமானம் மற்றும் செலவுகள் உள்ளடக்கியவாறு தயாரிக்கப்பட்டுள்ள நிதிச் செயலாற்றுகை பற்றிய அறிக்கை அமைச்சரவையால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு 970.58 பில்லியன் ரூபா வரி வருமானமும், 87.26 பில்லியன் ரூபா வரியில்லா வருமானமும், 5.77 பில்லியன் ரூபா மூலதன வருமானமும், 1.05 பில்லியன் ரூபா நன்கொடைகளும் கிடைத்துள்ளன. அதற்கமைய 1064.66 பில்லியன் ரூபா மொத்த வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதேவேளை 1226.55 பில்லியன் ரூபா மீண்டெழும் செலவுகளும், 336.39 பில்லியன் ரூபா அரச கடன் மீள்கொடுப்பனவு உள்ளிட்ட செலவுகளுமாக முதலாம் காலாண்டில் ஒட்டுமொத்த செலவு 1,562.94 பில்லியன் ரூபாவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

