ரூ.2 கோடி ஊழல் புகார்: ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை

282 0

ரூ.2 கோடி ஊழல் புகாரில் சிக்கியுள்ள டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. இதில் இடம்பெற்றிருந்த அமைச்சர் கபில்மிஸ்ரா நேற்று முன்தினம் திடீரென நீக்கப்பட்டார்.

ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவராக உள்ள குமார் விஸ்வாஸ் சமீப காலமாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவர் பாரதீய ஜனதாவில் சேர இருப்பதாக கூறப்படுகிறது. குமார் விஸ்வாசின் ஆதரவாளராக கபில்மிஸ்ரா இருந்து வந்தார்.

கெஜ்ரிவாலுக்கும், குமார் விஸ்வாசுக்கும் ஏற்பட்ட மோதலை அடுத்து குமார் விஸ்வாசை பழிவாங்கும் வகையில் அவரது ஆதரவாளரான கபில் மிஸ்ராவை கெஜ்ரிவால் நீக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று கபில்மிஸ்ரா, டெல்லி கவர்னரை சந்தித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஊழல் புகார் கூறினார்.

2 நாட்களுக்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ஆம்ஆத்மி மந்திரி சத்தியேந்தர்ஜெயின் ரூ.2 கோடி பணத்தை கொடுத்ததாகவும், அதை தனது கண்ணால் பார்த்ததாகவும் கபில்மிஸ்ரா கூறினார். மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் உறவினருக்கு ரூ.55 கோடி சொத்து ஒன்றை முடித்து கொடுத்ததாக சத்தியேந்தர் ஜெயின் தன்னிடம் கூறியதாகவும் கபில்மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.

இந்த ஊழல் புகார் வெளிவந்ததையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் வற்புறுத்தி வருகிறார்கள். டெல்லி பாரதீய ஜனதா மாநில தலைவர் மனோஜ்திவாரி கூறும்போது, இது டெல்லியின் கருப்பு நாள். அரவிந்த் கெஜ்ரிவால் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை தருகிறது. இப்போது தான் அரவிந்த் கெஜ்ரிவாலின் உண்மை முகம் தெரிகிறது.

லல்லுபிரசாத் ஆட்சியில் இருந்தபோது தனது அதிகாரத்தை பயன்படுத்தி செய்த ஊழலையும் கெஜ்ரிவால் தாண்டிவிட்டார். இதற்கு பொறுப்பேற்று உடனடியாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதேபோல டெல்லி காங்கிரஸ் கட்சி தலைவர் அஜய் மக்கானும் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.

கெஜ்ரிவால் அரசியலுக்கு வர காரணமாக இருந்த சமூக சேவகர் அன்னா ஹசாரேவும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். கெஜ்ரிவால் அரசால் மக்களுக்கு நல்லது கிடைக்கும் என்ற கனவு தகர்ந்து விட்டதாக கூறியிருக்கிறார்.

ஊழலை எதிர்த்து போராடுவதற்காகவே கட்சி தொடங்கிய கெஜ்ரிவாலே இப்போது ஊழல் புகாரில் சிக்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கபில்மிஸ்ரா பொய் குற்றச்சாட்டை கூறுகிறார் என்று கட்சியின் துணைத்தலைவர் மணிஷ்சிசோடியா கூறியிருக்கிறார். ஆனாலும் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த புகார் சம்மந்தமாக விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை.

அதே நேரத்தில் அவர் கட்சி எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினரை அழைத்து அவசரமாக ஆலோசனை நடத்தினார். அதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.

இன்று பஞ்சாப் மாநில கட்சி சம்மந்தமாக ஆலோசனை நடத்துவதற்காக அந்த மாநில எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளை டெல்லிக்கு அழைத்துள்ளார். அந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது எழுந்துள்ள ஊழல் புகார் தொடர்பாகவும் மூத்த நிர்வாகிகளுடன் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சியினர் பதவி விலக சொல்வதால் கெஜ்ரிவாலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர் ஏதேனும் அதிரடி முடிவுகளை எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.