எல்லாளனின் சமாதி அனுராதபுரத்தில் உள்ளதா?

597 0

Dakshina-stupaஇலங்கையின் தமிழ் அரசனான எல்லாளனின் சமாதியானது அனுராதபுர மாவட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான எஸ்.பத்மநாதன் தெரிவித்தார்.

‘எல்லாள மன்னனின் சமாதி இருப்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இங்கு காணப்படவில்லை. அனுராதபுரத்திற்கு அருகில் எரிந்த நிலையில் காணப்படும் செங்கற்களால் அமைக்கப்பட்ட இடிந்து போன கட்டடம் தான் எல்லாள மன்னனின் சமாதி எனக் கூறப்பட்டாலும் கூட இதில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ்ப் பிராமி வார்த்தைகளை எவராலும் வாசிக்க முடியவில்லை’ என பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரத்தில் காணப்படும் அழிவடைந்த கட்டடமானது இந்துக்களின் அல்லது பௌத்தர்களின் ஆலயமாக இருக்கலாம் எனவும் பெரும்பாலும் இது ஒரு பௌத்த ஆலயமாக இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் தமிழ் பேசும் நாகர்கள் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தை ஆட்சி செய்த காலத்தில் இது கட்டப்பட்டிருக்கலாம் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.

‘நீண்ட காலமாக இந்துமதத்திற்கு அல்லது பௌத்த மதத்திற்கு மாறும் எண்ணத்துடன் வாழ்ந்த நாகர்கள் தாம் சார்ந்த மதங்களைப் பிரதிபடுத்தும் வணக்கத் தலங்களை அமைத்தனர். இவ்வாறான தலங்களில் பெரும்பாலானவற்றில் இன்றும் ‘மணி நாகன்’ என்ற வார்த்தை தமிழ்ப் பிராமிய மொழியில் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இந்நிலையில் அனுராதபுரத்தில் எரிந்த நிலையில் காணப்படும் கட்டடமும் நாக அரசர் ஒருவரால் கட்டப்பட்டிருக்கலாம்’ என பேராசிரியர் பத்மநாதன் தெரிவித்தார்.

பேராசிரியர் பத்மநாதன்

பேராசிரியர் பத்மநாதன்

‘ஆனால் இங்கு குறிப்பிடப்படும் கட்டடமானது எல்லாள மன்னனின் சமாதி எனக் கூறப்படுகின்ற போதிலும் அது அவ்வாறிருப்பதற்கான சாத்தியமில்லை. ஏனெனில் எல்லாள மன்னன் கி.மு. 205-161 வரையான காலப்பகுதியில் அதாவது கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலேயே அனுராதபுரத்தை ஆட்சி செய்திருந்தார். ஆனால் இந்தக் கட்டடமானது அனுராதபுரத்தை நாகர்கள் ஆட்சி செய்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டதற்கான ஆதாரம் காணப்படுகிறது’ என பேராசிரியர் பத்மநாதன் தெரிவித்தார்.

எல்லாள மன்னனின் சமாதியானது கனித்த திஸ்ஸவினால் கி.பி. 165-193 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டதாக 1896ல் தொல்பொருளியலாளர் H.C.P பெல் தெரிவித்திருந்தார்.

கலாநிதி ஜேம்ஸ் இரட்ணமின் கருத்து:

சிங்கள அரசனான துட்டகெமுனுவுடனான யுத்தத்தின் போதே எல்லாள மன்னன் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதால் இது எல்லாள மன்னனின் சமாதியாக இருக்கலாம் எனவும் 19ம் நூற்றாண்டில் பிரித்தானியர்கள் சிறிலங்காவைத் தமது கொலனித்துவ ஆட்சிக்குக் கொண்டு வரும் வரை இந்த இடம் புனித இடமாகப் பேணப்பட்டிருப்பதற்கான சாட்சியம் காணப்படுவதாகவும் கலாநிதி ஜேம்ஸ் ரி.இரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குப் படையெடுத்து வந்ததாகக் கூறப்படும் சோழ அரசரான எல்லாளன் அனைவராலும் குறிப்பாக இவரைக் கொன்ற துட்டுகெமுனுவாலும் ஆட்சியாளராகக் கருதப்பட்டதுடன், இவர் போரில் கொல்லப்பட்ட இடத்தால் செல்லும் போது அமைதி வணக்கம் செலுத்திச் செல்லுமாறும் துட்டுகெமுனு தனது மக்களுக்கு கட்டளையிட்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது.

Dakshina stupa

‘இந்நிலையில், அனுராதபுரத்தில் காணப்படும் புராதன கட்டட அழிவுகளை அடையாளங் கண்டுகொள்வதில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன என்பதை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் அனுராதபுரத்தில் எல்லாள மன்னன் கொல்லப்பட்ட இடத்தைக் கடந்து செல்லும் மன்னர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றோர் அமைதி வணக்கம் செலுத்தியே செல்ல வேண்டும் எனக் கட்டளை இடப்பட்டிருந்தமை உறுதியாகின்றது. ஆகவே அனுராதபுரத்திலுள்ள ஒரு இடம் இவ்வாறான பிரபலத்தைப் பெற்றுள்ளது இங்கு உறுதியாகிறது. இது காலாதி காலமாக செவி வழியாகக் கூறப்படும் கதையாகும். ஆகவே இது தொடர்பில் தவறு நடந்திருப்பதற்கான வாய்ப்பு சாத்தியமற்றது’ என கலாநிதி இரட்ணம் எழுதியிருந்தார்.

தேவானந்தாவின் வேண்டுகோள்:

சிங்கள ஆட்சியின் கீழ் இத்தீவை ஒன்றிணைப்பதற்காக எல்லாள மன்னனைக் கொலை செய்த சிங்கள ஆட்சியாளரான துட்டகெமுனுவின் மாளிகையைப் புனரமைக்கும் அதேவேளையில் அனுராதபுரத்தில் உள்ளதாகக் கூறப்படும் தமிழ் மன்னன் எல்லாளனின் சமாதியைக் கண்டறிந்து அதனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துட்டகெமுனு – எல்லாளனுக்கு இடையில் இடம்பெற்ற யுத்தமானது சிங்கள-தமிழ் யுத்தம் எனக் கூறப்படுவது தவறானது எனவும் அனுராதபுரத்தைத் தத்தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே இவ்விரு அரசர்களும் சண்டையிட்டனர் எனவும் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

சோழத் தமிழ் மன்னான எல்லாளனை சிங்கள ஆட்சியாளரான துட்டகெமுனு கொலை செய்ததானது தமிழ் ‘மக்களை சிங்கள பௌத்தர்கள் வெற்றி கொண்டமைக்கான ஒரு சரித்திர நிகழ்வாகக் கூறப்படுகின்றது. அத்துடன் தென்னிந்தியாவைச் சேர்ந்த தமிழ் அரசன் ஒருவன் இலங்கை மீது படையெடுத்த போது அந்தப் படையெடுப்பானது தடுக்கப்பட்டதாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இது பெரும்பான்மை சிங்கள – பௌத்த சமூகத்தவர்கள் மத்தியில் பெரியதொரு வரலாற்றுப் பதிவாக உருவகப்படுத்தப்பட்டுள்ளதாகவும்’ தேவானந்தா குறிப்பிட்டார்.

துட்டகெமுனு – எல்லாளன் மத்தியில் இடம்பெற்ற யுத்தமானது இன ரீதியான யுத்தமல்ல என்ற தேவானந்தாவின் கருத்திற்குப் பேராசிரியர் பத்மநாதனும் தனது ஆதரவை வழங்கினார்.

‘துட்டகெமுனு தொடர்பாக பதினொரு அத்தியாயங்களில் விபரிக்கும் மகாவம்சமானது இவரை சிங்களவர் என அடையாளங் காட்டவில்லை’ என பேராசிரியர் பத்மநாதன் சுட்டிக்காட்டுகிறார்.

தொல்லியலை அரசியல் மயப்படுத்துதல்:

எல்லாள மன்னனின் சமாதியைக் கண்டறிந்து அதனைப் பாதுகாப்பது தொடர்பாக தேவானந்தாவால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட கருத்திற்கு இதுவரையில் சிறிலங்கா அரசாங்கம் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

இது தொடர்பாக தமிழ் வரலாற்றாய்வாளர்கள் ஆச்சரியப்படவில்லை. எல்லாள மன்னனின் சமாதி தொடர்பான எண்ணக்கருவானது தூண்டப்பட்டால், எல்லாள மன்னனை துட்டகெமுனு என்கின்ற சிங்கள மன்னன் தோற்கடித்த விடயமானது சித்தரிக்கப்படுவதன் மூலம் இது சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையில் மேலும் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் என தமிழ் வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர்.

எல்லாளன் ஒரு ஆட்சியாளர் மட்டுமே என மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், சிங்களவர்கள் மத்தியில் இது தொடர்பான வெற்றி மமதை தற்போதும் காணப்படுகிறது. பாளி மொழியில் எழுதப்பட்ட மகாவம்சத்தில், எல்லாள மன்னனின் வீரத்திறன் தொடர்பாக துட்டகெமுனு விழிப்புடன் செயற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கமானது துட்டகெமுனு மன்னன் பத்து ஆண்டுகளாக வாழ்ந்ததாகக் கூறப்படும் மாளிகையைப் புனரமைக்கும் பணியை முன்னெடுக்கும் அதேவேளையில் எல்லாள மன்னனின் சமாதியையும் கண்டறிந்து அதனையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதுவே இன மீளிணக்கச் செயற்பாட்டை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக இருக்கும் எனவும் தேவானந்தா நாடாளுமன்றில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், எல்லாள மன்னனின் சமாதி தொடர்பான தேவானந்தாவின் வேண்டுகோள் நிறைவேற்றப்படும் என தமிழ் வரலாற்றாய்வாளர்களும் தொல்பொருளியலாளர்களும் நம்பிக்கை கொள்ளவில்லை. சிறிலங்காவின் வரலாறு மற்றும் தொல்பொருளியல் போன்றன நீண்டகாலமாக நிலைத்திருக்கும் சிங்கள – தமிழ் இன முரண்பாட்டுடன் தொடர்புபடுத்தப்பட்டுச் சித்தரிக்கப்படுவதே இதற்கான மூல காரணம் எனவும் பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிட்டுகிறார்.

ஆங்கிலத்தில்  – P.K.Balachandran
வழிமூலம்        – New Indian express
மொழியாக்கம் – நித்தியபாரதி