மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபான உற்பத்தி நிலையத்தினை அமைப்பதற்கு அனுமதியளிக்க கூடாது என்பதை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள்…….(காணொளி)

320 0

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுசார உற்பத்திசாலையினை தடுத்து நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட கொடுவாமடு பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டம் மதுவால் சீரழிந்துவரும் நிலையில் மதுபான உற்பத்திசாலையினை அமைத்து மேலும் சீரழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

யுத்ததினால் சீரழிந்துபோயுள்ள பகுதிகளை இதுவரையில் கட்டியெழுப்ப நடவடிக்கையெடுக்காத இந்த நல்லாட்சி அரசாங்கம், மதுசார உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு மட்டும் அக்கறையெடுப்பதன் நோக்கம் என்ன? என்றும் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்;டத்தில் மதுபாவனையினை குறைக்க வேண்டும், மதுபான விற்பனை நிலையத்தினை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவரும் நிலையில், அனுமதி வழங்கப்பட்டுள்ளமையானது மட்டக்களப்பினை சீரழிக்கும் நடவடிக்கையென மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தமது பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பிலும் விவசாயிகளின் நன்மை தொடர்பிலும் அக்கறைசெலுத்தாத சில அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும், மதுசார உற்பத்தி நிலையம் அமைப்பதில் அக்கறைசெலுத்தி வருவது தொடர்பிலும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இன்று மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டார்.