இந்தியா மற்றும் சீனாவுடன் செய்துள்ள உடன்படிக்கைகள் தொடர்பான தகவல்களை சபைக்கு முன்வைக்க வேண்டும்

107 0

வெளிநாடுகளுடன் இலங்கை அரசாங்கம் செய்துகொள்ளும் உடன்படிக்கைகளை பாராளுமன்றத்தில் முன்வைக்காது இருப்பதன் ஊடாக அது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் சிறப்புரிமைகளை மீறும் செயலாகும். அதனால் இந்தியா மற்றும் சீனாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகள் தொடர்பான தகவல்களை சபைக்கு முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஏப்ரல் 4, 5, 6ஆம் திகதிகளில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது இலங்கை – இந்தியாவுக்டையே 7 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக ஊடகங்களின் ஊடாக அறிந்துகொண்டேன். இதற்கு முன்னர் சீனாவுடனும் உடன்படிக்கைகள் செய்துகொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளன.

அரசாங்கம் என்ற வகையில் ஏதேனும் நாட்டுடன்  செய்துகொள்ளும் உடன்படிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிந்துகொள்வதற்கான உரிமை உள்ளது.

இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் பாராளுமன்றத்திற்கும் மக்களுக்கும் தெரியாமல் பல்வேறு நாடுகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளால் நாட்டுக்கு பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டதுடன், பின்னர் வந்த அரசாங்கங்களுக்கும் பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தன.

எந்தவொரு நாட்டுடனும் உடன்படிக்கை செய்யும் போதும் அது ஜனாதிபதியாகவோ, அரசாங்கமோ அன்றி நாடாகவே அதனை செய்கின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமருடன் செய்துகொண்டுள்ள பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையில் உள்ள விடயங்கள் தொடர்பில் தகவல்கள் தெரியவரவில்லை. அதுபற்றி பாராளுமன்றத்தில் பாதுகாப்பு ஆலோசனை குழு கூட்டத்திலும் கலந்துரையாடப்படவில்லை.

இந்நிலையில் இந்தியா மற்றும் சீனாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகளை மறைப்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறும் செயற்படாகும். இதனால் அந்த உடன்படிக்கைளை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு கோருகின்றோம். அத்துடன் அது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதத்தை நடத்தவும் ஏற்பாடுகளை செய்யுமாறு கோருகின்றோம்.

இது தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெற்றுக்கொள்ளுமாறு கோரியிருந்தாலும் அது தொடர்பில் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியவில்லை.

இதனால் இந்த உடன்படிக்கைகள் தொடர்பில் விவாதங்களை நடத்துவதற்கான தகவல்களை அறிந்துகொள்ளக் கூடிய ஏற்பாடுகளை செய்யுமாறும் அந்த விடயங்களை சபையில் முன்வைக்குமாறும்  நாங்கள் சபை முதல்வர், பிரதமர் ஆகியோரிடம் கேட்கின்றேன் என்றார்