வவுனியா கணேசபுரத்தில் வனவளத்துறை திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட எல்லை கற்கள் நடும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசேட கோரிக்கையை முன்வைத்து உரையாற்றுகையில்,
வவுனியா கணேசபுரம் மக்கள் தற்போது ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். வன இலாகா திணைக்களத்தால் அந்தப் பகுதியில் கல் நடப்படுவதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட பின்னர் அந்த விடயங்களை கையாளுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.
எவருக்கும் கூறாது கல் நாட்டப்படக் கூடாது என்றே அபிவிருத்திக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவருக்கும் கூறாது அது நடைபெறும் நிலையில் மக்கள் அங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உடனடியாக அந்த நடவடிக்கைகளை நிறுத்த அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, இந்த விடயம் நேற்று செவ்வாய்க்கிழமை (08) காலையில் எங்களுக்கு அறியக் கிடைத்தது. அதனை அறிந்த உடனேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது தேர்தல் காலம் முடிவடையும் வரையிலும் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அதனை செயற்படுத்தும் வரையில் அந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

