காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் ஆகியவற்றுக்குக் கடந்த காலங்களில் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இம்முறை குறைந்தளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடருக்குச் சென்று அதிக நிதி ஒதுக்கியுள்ளதாக ஆங்கிலத்தில் குறிப்பிட்டு விட்டு, குறைவாக நிதி ஒதுக்கியிருப்பதாக இங்கு வந்து சிங்களத்தில் குறிப்பிட்டால் ஐரோப்பிய ஒன்றிய தூது குழுவினர் நம்பப் போவதில்லை. ஏனெனில் அவர்களிடம் மிகத் திறமையான மொழிப்பெயர்ப்பாளர்கள் உள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற சேர் பெறுமதி (திருத்த ) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிடுவதைக் கேட்டு ஆச்சியரியமடைந்தேன். எட்கா, சோபா, எம்.சி.சி., ஆகிய ஒப்பந்தங்கள் மற்றும் சிங்கப்பூர் உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றைக் கைச்சாத்திட்டால் இலங்கையானது அமெரிக்கா , இந்தியா ஆகிய நாடுகளினால் ஆக்கிரமிக்கப்படும் என்று யார் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டது. மக்களைத் தவறாக இனியும் வழிநடத்தாதீர்கள். பொய்யுரைக்காதீர்கள். உண்மையைக் குறிப்பிடுங்கள்.
கடந்த கால அரசாங்கங்கள் பொருளாதார மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது மக்கள் விடுதலை முன்னணி தான் சகல வழிகளிலும் எதிர்ப்பு தெரிவித்தது. இன்று இந்தியா அரசாங்கத்துக்கு நல்லதாக இருக்கலாம். ஆனால் கடந்த காலங்களில் இந்திய எதிர்ப்பு கொள்கையை முன்னெடுத்தீர்கள்.இதனால் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டுமாயின் வெளிநாடுகள் இலங்கையை ஆக்கிரமிக்கும் என்ற எண்ணப்பாடு களையப்பட வேண்டும். அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை தொடர்பில் குறிப்பிடுவதற்கு ஒன்றுமில்லை. எந்த கொள்கையை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்படுகிறது என்பது எமக்குப் பிரச்சினைக்குரியதாக உள்ளது.
பயங்கரவாத தனிச்சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் காலம் காலமாகப் பேசப்படுகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் அண்மையில் முஸ்லிம் இளைஞர் ஒருவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்ய ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்க அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் உலக நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூது குழுவினர் இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் முறையற்ற கைதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் ஆகியவற்றுக்குக் கடந்த காலங்களில் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இம்முறை குறைந்தளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடருக்குச் சென்று அதிக நிதி ஒதுக்கியுள்ளதாக ஆங்கிலத்தில் குறிப்பிட்டு விட்டு, குறைவாக நிதி ஒதுக்கியிருப்பதாக இங்கு வந்து சிங்களத்தில் குறிப்பிட்டால் ஐரோப்பிய ஒன்றிய தூது குழுவினர் நம்பப் போவதில்லை. ஏனெனில் அவர்களிடம் மிகத் திறமையான மொழிப்பெயர்ப்பாளர்கள் உள்ளார்கள்.

