தமிழின அழிப்பின் உச்ச நாள் மே 18 – CCT – Franse

420 0

 

அன்பான பிரான்சுவாழ் தமிழீழ மக்களே! உலகம் வாழ் தமிழீழ மக்களே !

05.05.2017.

தமிழின அழிப்பின் உச்ச நாள் மே 18

21 ஆம் நூற்றாண்டில் உலக நாடுகளில் இதுவரை நடைபெற்று வந்த போராட்டத்திற்கும், நடைபெற்று வருகின்ற போராட்டத்திற்கும் தமிழீழ மண்ணில் நடைபெற்ற போராட்டத்திற்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. ஏனைய நாடுகளில் நடைபெற்றதும், நடந்து வரும் போராட்டங்களும், அதனை தலைமையேற்று நடத்துகின்ற தலைவர்களும், அமைப்புகளும் முன்னெடுத்த சூழ்நிலைகளும், அவர்களுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோது தரைவழியால் அண்டை நாடுகளுக்கு நகர்ந்து அயல்நாடுகளின் உதவிகளைப் பெற்றும் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்து வந்ததும் வெற்றி கண்டு அவர்கள் சுதந்திர தேசம் அமைத்துக் கொண்டமையும் நிகழ்கால வரலாறுகளாக அமைந்துள்ளன.

இதில் தமிழீழ மக்களாகிய எமது விடுதலைக்கான போராட்டமோ முற்றிலும் மாறுபட்டதாகின்றது. தமிழீழ தேசமானது மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்டதாகவும் ஒரேயொரு தரைப்பகுதி அதுவும் தமிழர் தாயகத்தை அபகரித்தவன் கையிலும் இருந்துவரும் நிலையில் உறுதியுடன் தமிழீழ தேச விடுதலைக்கான போராட்டத்தைத் தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள் தமிழீழ தேசமே தமிழினத்தின் ஒரே தீர்வும் சுதந்திரமான வாழ்வும் என்ற கொள்கையில் தம்மை நம்பி வந்த தம்பிமார்களையும், மண்பற்றுதல் கொண்ட மக்களையும் வைத்துக்கொண்டு அவர்களை விட்டுக் கடல்கடந்து வெளியே வராது அங்கிருந்து கொண்டே விடுதலைப்; போராட்டத்தைக் கூர்மைப்படுத்தி எந்த நிலையிலும் பின்வாங்காது உண்மையையும், நேர்மையையும், அஞ்சாமையையும், விலைபோகா ஒழுக்கத்தையும், தமது அணிகலங்களாகக் கொண்டு தாம் வரித்துக் கொண்ட இலட்சியத்திலிருந்து சிறிதளவேனும் பின்வாங்காது அர்ப்பணிப்போடும், உயிர்தியாகத்திற்கும்;, வீரத்திற்கு எடுத்துக்காட்டாகவும், சாவுக்கே சரித்திரம் சொன்ன உலகம் உயர்வாகப் பார்த்த அற்புதம்மிக்க போராட்டத்தை நகர்த்தியிருந்தார்.

சில நாடுகளில் அரசுக்கு எதிராகச் சில அமைப்புகள் ஒன்றிணைந்து விடுதலைப்போராட்டத்தையும், உரிமைப்போரையும் நிகழ்த்துகின்ற அமைப்புக்கள் பெரும்மளவில் மக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. அவற்றையெல்லாம்; தீவிரவாத அமைப்புகள் என்றும் பின்னர் பயங்கரவாதிகள் என்றும் அந்தந்த நாடுகள் முத்திரை குத்தி வருகின்றன. ஆனால் எமது தேச விடுதலைப்போராட்டமும் அதனை உயிர்த்தியாகத்தின் மூலம் முன்னெடுத்த விடுதலைப்புலிகள் அமைப்பும் தம் மண்ணையும், மீளாத்துயரில் இருந்து வரும் தமிழீழ மக்களையும் காப்பாற்றுவதற்கு தோன்றியதொரு இனக்காப்பு அமைப்பாகும். இவர்களைத்; தீவிரவாதிகள் என்று கூறிய இந்த உலகம் இன்று இவர்கள் பயங்கரவாதிகள் என்றும் பயங்கரவாத அமைப்பு என்று கூறியதையும் அதை நம்பிச் சர்வதேசம் கண்மூடித்தனமாக ஒருதலைப்பட்சமாக எடுத்த முடிவாலும், பயங்கரவாதப் பட்டியலில் எம் விடுதலை வீரர்களை இணைத்ததும் அதனால் புலத்தில் எற்படுத்தப்பட்ட நெருக்கடிகளும் கணக்கற்றவையாகும். அதுமட்டுமன்றிக் எங்கள் தமிழீழக் களத்தில் 2009 நடைபெற்ற மாபெரும் தமிழின அழிப்புக்கும் இது வழிகோலியிருந்தது. தமிழீழ விடிவிற்காய் தம் உயிராய் , காவல்த்தெய்வமாய் நேசித்த தலைவனுடன் ஒன்றாகச் சேர்ந்து வீரப்புதல்வர்களும் தமிழீழ மக்களும் தம்; உரிமைக்காகப் போரிட்டதும் தமிழீழ இலக்கு விரைவானதைப் பொறுக்காத சிங்கள தேசமும் அயல்நாடும் பயங்கவாத ஒழிப்பு என்ற பதத்தினை முன்வைத்துச் சர்வதேசத்தின் கண்களைக்குருடாக்கி அதன் கவனத்தையும் திசைதிருப்பி 2007 முதல் 2009 மே மாதம் வரை கிட்டத்தட்ட ஒன்றரை இலட்;சம் ( 150 000 ) தமிழீழ மக்களைக் கொன்று மாபெரும் தமிழின அழிப்பினை செய்து முடித்திருந்தனர். அது மட்டுமன்றிக் தங்களால் கொல்லப்பட்ட அனைவரும்; பயங்கரவாதிகள் என்றும்;, பயங்கரவதாத்திற்குத் துணைபோனவர்கள் என்றும் பயங்கரவாதிகளைப் பெற்றவர்கள் என்றும் பயங்கரவாதிகளுடன் உடன் பிறந்தவர்கள் என்றும் கூறித், தங்கள் கோரச் செயல்களுக்கும் கோரக்கொலைகளுக்கும் தமிழினப்படுகொலையைச் செய்தவர்கள் நியாயம் கற்பிக்கின்றனர். ஒரு சமூகத்தையோ, இனத்தையோ கையகப்படுத்த தொடர்ந்து குற்ற உணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டுமாம் அவர்களுக்கு குற்ற உணர்வை வர வைத்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் அவர்களை ஆட்டிப்படைக்க முடியுமாம் ! உலகத்தில் மக்களை மண்டியிட வைப்பதற்கு ஒரே வழி, அவர்களுடைய தன்மானத்தை உரித்து எடுத்துவிடுவது. அதையே சில நாடுகள் இன்று செய்து வருகின்றன. செய்யாத குற்றத்தை செய்ததைப்போல உருவாக்கி….. இயல்பாக நடக்கும் நிகழ்வுகளுக்குப் பொறுப்பாக்குவதன் மூலம் ஒருவரையோ, சமூகத்iயோ, இனத்தையோ பணியவைக்க முடியும் என்ற நிலப்பாட்டை எமது மண்ணில் ஏற்படுத்தி அதை தமிழினப்படுகொலைக்கான நியாயப்படுத்தலாக இன்;று இலங்கைத்தீவிலும், சர்வதேசரீதியாகவும் கொண்டு வரப்பட்டுள்ளதை பார்க்கக்கூடியதாகவுள்ளது. இதனை நாம் பார்த்துக்கொண்டு இனியும் மௌனிகளாக உணர்வற்றவர்களாக வாழப்போகின்றோமா? ‘விழிப்புணர்வு ” இருக்கின்றவர்களும், சமூகமும், இனமும் அடுத்தவர்களுக்கு தீங்கு செய்யும் செயல்களை செய்வதில்லை. குற்ற உணர்வுக்கும் ஆட்படுவதில்லை. எனவே நியாயத்தின், சத்தியத்தின், உண்மையின் பக்கம் தொடர்ந்து நிற்போம்!

புலம்பெயர்ந்த மண்ணிலே குறிப்பாக அமெரிக்கா, கனடா முதல் அவுஸ்ரேலியா வரையும், ஐரோப்பிய நாடுகளிலும் 60 ஆண்டு;களாக ஆறு தலைமுறையினர் வாழ்ந்து வருகின்றோம். தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் 1977 ஆம் ஆண்டிற்கு முன்பாகவே தமிழினம் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதே அதனை மறந்து போகப்போகின்றோமா? மிகுதி மூன்று தசாதப்தமாக தமிழின அழிப்பு நடைபெற்றிருக்கின்றதே அதையும் விட்டுவிடப்போகின்றோமா? காலாகாலமாக புலம்பெயர்ந்த மக்கள் மண்ணின் பிடிவிட்டுப்போகாமலும், தமிழீழ மண்ணில் நடைபெற்ற இனஅழிப்பை நிறுத்தக்கோரியும், பலி கொள்ளப்பட்ட உயிர்களுக்கு நீதிகேட்டும் ஜ.நாவின் மனிவுரிமைகள் செயலகம் முன்பாகவும், அமெரிக்கா கனடா வாழ் தமிழீழ மக்களால் ஜ. நாடுகள் சபை முன்பாகவும், ஒவ்வொரு நாடுகளிலும் இயங்கும் தமிழர் அமைப்புகள் தாம் வாழும் நாட்டின் அரபீடங்களின் கதவுகளை தட்டியதாலும் தான் ஈழத்தமிழ் மக்களின் உண்மையான இனப்பிரச்சனையும், அவர்களுக்கிழைக்கப்பட்ட அநீதியையும் சர்வதேசம் புரிந்து கொண்டது அதனால் ஏற்பட்ட போர்நிறுத்தங்களும், பேச்சுவார்த்தைகளும், தேசியத்தலைவர் அவர்களின் திர்க்கதர்சனம் மிக்க பார்வையும், நகர்வும், சிங்கள அரசிலே தங்கியிராது ஜ.நாடுகளின் உரிமை சாசனத்திற்கு அமைவாக தமிழீழ தனி நிழல்அரசினை நேர்த்தியாக திறம்பட நடாத்தி சர்வதேசத்தின் கவனத்தை பெற்றதும் இதுவே சர்வதேசத்தின் பக்கபலத்துடன் தமிழீழ தேசத்தை தமிழீழ மக்களுக்கு பெற்றுக்கொடுத்துவிடும் என்ற சிங்கள தேசத்தினதும், தமிழர்களுக்கான தொரு தேசம் அமைவதை விரும்பாத அண்டைநாடுகளும் தமிழின மக்களுக்கு பலமாகவிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பை அழிக்க திட்டம் தீட்டி ஆயுதங்களையும் தொழில்நுட்பங்களையும் வழங்கி ஒரு நாட்டிற்க்கிடையே நடைபெறுகின்ற போர் ஒன்றையே தனது நாட்டின் குடிமக்கள் மேல் நடாத்தி ஏப்பிரல், மே மாதங்களில் 50 ஆயிரம் மக்களை படுகொலை செய்திருந்தது. பல்லாயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டனர். நிகழ்ந்த உண்மைகளை மூடிமறைக்க சிறீலங்கா அரசும் அதற்குத் துணைபோன நாடுகளும் தமது பூகோள நலனுக்காக பெரு முயற்சிகளை செய்து உதவியும் வந்தன. தமிழீழ மக்களின் 8 ஆண்டுகள் தொடர் கண்ணீருடனான கவனயீர்ப்புப் போராட்டங்களும், புலம்பெயர் மக்களின் அர்ப்பணிப்பு மிக்க அரசியற் கவனயீர்ப்புப் போராட்டங்களும் அணைந்து போகாது நீறுபூத்த நெருப்பாக இருந்து வருவதும், அதனையும் தாண்டி சிறீலங்கா அரசு தனது ராஐதந்திர நகர்வுகளை எமது இனத்தின் புல்லுருவிகளின் துணைகொண்டே விடுதலை வேட்கையை தணித்து விட முயற்சிக்கின்றது. இதனை நாம் முறியடிக்கும் ஒரு களமாகவே மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் பேரணி உலகம் முழுவதும் அமைய வேண்டும்.

    தாய் மண்ணில் வீழ்ந்து மண்ணிற்குள் விதையாகிப் போனவர்கள் எங்கள் பிள்ளைகள், எமது உடன்பிறப்புகள்;, எங்கள் உறவினர்கள், எங்கள் பள்ளித்தோழர்கள் , நண்பர்கள், எங்கள் ஊரவர்கள், எங்கள் தமிழீழ தேசத்தின் பிள்ளைகள்.

    இவர்களா பயங்கரவாதிகள் ? இவர்கள் போராட்டம் பயங்கரவாதப்போராட்டமா ?

    சிங்களத்தினது பொய்யான பரப்புரைக்குச் செவிசாய்த்த நாடுகளுக்கு தமிழீழ மக்கள் நாம் எமது உண்மையான அன்றைய நிலையையும், இன்றைய நிலையையும் எடுத்துச்சொல்ல வேண்டாமா?

    உரிய காலத்தில் உரிய நேரத்தில் உரியவர்களிடம் சனநாயக அரசியல் ரீதியில் எமது வேணவாவை எம் ஆழ்;மன விருப்பத்தைச் சொல்ல வேண்டாமா ? நியாயமான எமது கோரிக்கையை முன்வைக்க வேண்டாமா? இனியும் வாழாதிருக்கப்போகின்றோமா?

    அல்லது தமிழீழ விடுதலைக்காகச் சிந்திய குருதியும் எமது மாவீரர்களின் உயிர்கொடையும் வீணாகிப்போவதா?

    எங்கள் காவல் தெய்வங்கள் கண்மணிகளின் தியாகத்தையும், அர்பணிப்பையும் ஒன்றுமில்லாதவைகள் என்று ஆக்கிவிடப்போகின்றோமா?

    இப்படி பல நூறு கேள்விகள் எம்மை நாம் கேட்டுக் கொள்வோம். எமது இன ஒற்றுமையையும், விடுதலையில் உள்ள விடாப்பிடியையும் இந்த உலகம் உற்றுப்பார்க்க வைக்க வேண்டாமா?  முள்ளிவாய்க்கால் எல்லாம் முடிந்து போனவையல்லத் தமிழா? அது எமக்கு அடுத்த கட்டத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு தியாக வேள்வி.

    சிரிப்புடன் தம்வாழ்வைத் தம் இனத்திற்காக, சந்ததிக்காகத் தந்தவர்களுடன் இருந்தவர்களே!, வாழ்ந்தவர்களே, வழிநடத்தியவர்களே நீங்கள் கொண்ட கொள்கையிலிருந்து வழிமாறிவிடாதீர்கள், அமைதியாகிவிடாதீர்கள், பாதைகள் தான் மாறியுள்ளன. அதன் பயணத்தை இறுதிவரை கொண்டு செல்லும் பொறுப்பு,  விடுதலைத்தேரின் வடம்  புலம்பெயர்ந்து வாழும் உறவுகளே உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  உங்கள் உணர்வுகளைப் புதைத்துவிட்டு புழுங்கிப்போய்விடாதீர்கள்.

    உணர்வுடனும்; உறுதியுடனும் தலைவன் காட்டிய நேர்த்தியான வழியில் நின்று எமதினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும், உயிர் பறிப்புக்கும் நீதிகேட்டு அது கிடைக்கும் வரை உறுதியுடன் அரசியற் களத்தில் நிற்போம்; என்று உறுதிஎடுத்தக் கொள்ளுவோம்.

    உங்களையும் எங்களையும் நம்பி உயிர் தந்த மாவீரச் செல்வங்களுக்கு பயங்கரவாதிகள் என்ற அபயகீர்த்தியை ஏற்படுத்தியவர்களின் முகத்திரையைக் கிழித்து எங்கள் மாவீரச் செல்வங்களுக்கு மகுடம் சூட்டுவோம்.

    அவர்களின் மகத்துவத்தை உலகறியச் செய்வோம்.

    எங்களுக்காகத் தங்கள் இன்னுயிர்களைத் தந்தவர்களுக்கு நாம் என்ன தரப்போகின்றோம்….மழையில் நனைந்து வெய்யிலில் வதங்கித் தாகத்தில் தவித்து பசியால்துடித்து உணர்வுகளை அழித்து உயிர்க்குடும்பத்தைப் பிரிந்து இறுதியில் எங்களுக்காய் உயிரையே கொடுத்தவர்களுக்கு நாம் ஓரு பொழுதைக் கொடுக்கத் தயங்கலாமா?

    எங்கள் இனத்தின் விடிவிற்காக. இதை இன்று காலம் எமக்குத் தந்துள்ள கடமையாக எண்ணுவோம். குடும்பங்களாக,  உறவினர்களாக , நண்பர்களாக, ஊரவர்களாக, உணர்வுள்ள தமிழர்களாக மே 18 தமிழின அழிப்பு நாள் பேரணியில் பிரான்சிலும் உலகமெங்கும் ஏற்பாடாகியுள்ள பேரணிகளிலும் கலந்து கொள்வோம்.

‘ புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து ”

என்ற வள்ளுவர் கூற்றுக்கிணங்க எங்கள் வாழ்விற்காகத் தலைவனிடம் தங்கள் சாவைக் கெஞ்சிக்கேட்டுப் பெற்றவர்களின் கனவுகள் வீணாக நாம் விடலாமா?

அணிதிரள்வோம்  அகிலத்தையே எம்பக்கம் திருப்புவோம். ஆழகான எங்கள் தமிழீழத்தை வென்றெடுப்போம்.

‘ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ”

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு
அதன் உப கட்டமைப்புக்கள்