இந்நாட்டின் சுகாதார ஊழியர்களின் திறமையான மற்றும் தரமான சேவையின் காரணமாக, போலியோ, சின்னமுத்து, ரூபெல்லா மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் ஏற்பு நோய் போன்றன ஒழிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மேலும், ஹெபடைடிஸ் பி உட்பட பல நோய்கள் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலைமை நாட்டின் சுகாதார சேவையின் சிறப்பை உலகிற்கு நிரூபிக்கிறது என்றார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய நோய் தடுப்பு மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, தொற்றுநோய் பிரிவு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு, உலக சுகாதார ஸ்தாபனம், காவி (GAVI) சர்வதேச தடுப்பூசி கூட்டணி மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்) ஆகியவற்றின் பங்களிப்புடன் நடைபெற்றது. இம்மாநாடு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி அளவுகளை மதிப்பாய்வு செய்வதும், தடுப்பூசி அளவுகளில் மாற்றங்கள் தேவைப்பட்டால், தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றி விவாதித்து முடிவுகளை எடுப்பது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த நாட்டிற்கு புதிய நோய் தடுப்பூசிகள் எவ்வாறு, எந்த வடிவங்களில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதையும், எதிர்கால பரிந்துரைகள் மற்றும் திட்டங்களை வகுப்பது ஆகியன தொடர்பிலும் மாநாட்டின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அமைச்சர் இதன்போது உரையாற்றுகையில்,
தொற்று நோய்கள், தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் சுகாதார மேம்பாட்டிற்கான ஒரு வலுவான அடித்தளமாக ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. புதிய அரசாங்கம் இந்த நாட்டு மக்களுக்கு உலகளாவிய சுகாதார சேவையை வழங்குவதிலும் உறுதியாக உள்ளது .
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 2030 ஆம் ஆண்டு வரையான உலகளாவிய நோய் தடுப்பு நிகழ்ச்சி நிரலுக்கமைய, நோய் தடுப்பு இலக்குகளை அடைவதற்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். மேலும், இந்நாட்டு மக்களுக்கு சிறந்த சுகாதார வழங்க தடுப்பூசி செயற்திட்டங்களை விரிவுபடுத்துதல், புதிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துதல் ஆகியன தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு நோய் தடுப்பு செயன்முறையைத் தொடர சர்வதேச தடுப்பூசி கூட்டணி அளித்த பங்களிப்புக்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன். தடுப்பூசி திட்டங்களை மேம்படுத்தல், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தல் மற்றும் பொது சுகாதார சேவைகளை மேலும் பலப்படுத்தல் ஆகியவற்றிற்காக எதிர்வரும் காலங்களிலும் புதிய தடுப்பூசிகளை சர்வதேச தடுப்பூசி கூட்டமைப்பு அறிமுகப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

