மக்களுக்கும் சாதகமாக அமையும் வெளிநாட்டு முதலீடுகளை மாத்திரமே ஏற்போம்

42 0

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை ஊடாக உற்பத்தி செய்யும் மின்சாரத்தை ஒரு அலகு 13 ரூபா என்ற அடிப்படையில் கொள்வனவு செய்யும் சாத்தியம் காணப்படும் போது ஏன் 25 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய வேண்டும். நாங்கள் குறிப்பிடும் தொகைக்கு இணக்கம் தெரிவிக்கும் வரை எந்த ஒப்பந்தத்தையும் கவனத்திற்கொள்ள போவதில்லை. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சாதகமாக அமையும் வெளிநாட்டு முதலீடுகளை மாத்திரமே ஏற்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மாத்தறை – தெய்யந்தர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பங்குப்பற்றலுடன் எதிர்வரும் மாதம் 5 ஆம் திகதி 120 மெகாவோட் சூரிய மின்நிலையத் திட்டத்தை ஆரம்பிப்போம். இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள் அனைத்தையும் மீண்டும் ஆரம்பிப்போம். இடைநிறுத்தப்பட்டுள்ள வீதி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை மீண்டும் ஆரம்பிக்க சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் அம்பாந்தோட்டை பகுதியில் சீன முதலீட்டுடன் பாரிய அபிவிருத்தி கருத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். ஆகவே பல்வேறு வழிகளில் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மையின் உச்ச பயனை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுப்போம்.அரச சேவைக்கு இந்த ஆண்டு மாத்திரம் 30 ஆயிரம் பேரை தகுதி அடிப்படையில் தேவைக்கேற்ப இணைத்துக் கொள்வோம். அரச சேவையின் அடிப்படை சம்பளத்தை அதிகரித்துள்ளோம். வினைத்திறனான வகையில் அரச சேவை செயற்பட வேண்டும்.பாடசாலை மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவிகள் அனைவருக்கும் மாதாந்தம் தலா 8 ஆரோக்கிய துவாய்களை (சானிட்டரி நாப்கின்) வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மாணவர்களின் கல்விக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

மன்னார் பகுதியில் காற்றாலை மின்னுற்பத்திக்கு வெளிநாட்டு நிறுவனத்துக்கு கடந்த அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.அந்த நிறுவனம் மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்சார சபைக்கு ஒரு அலகு 25 ரூபா என்ற அடிப்படையில் மின்சாரத்தை கொள்வனவு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளது.

நாங்கள் இதனை மாற்றியமைத்து அதே மன்னார் பகுதியில் காற்றாலை மின்சார உற்பத்தியின் மின்சாரத்தை 13 ரூபாய்க்கு கொள்வனவு செய்யும் வகையில் மறுசீரமைத்துள்ளோம். எந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருந்தாலும் நாங்கள் குறிப்பிடும் தொகைக்கு குறித்த நிறுவனம் இணக்கம் தெரிவிக்க வேண்டும் 13 ரூபாய்க்கு கொள்வனவு செய்யும் சாத்தியம் காணப்படும் போது ஏன் 25 ரூபாய்க்கு மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டும். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பயனுடைய வெளிநாட்டு முதலீடுகளை மாத்திரமே செயற்படுத்துவோம்.

2028 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த வேண்டும். வெளிநாட்டு கையிருப்பை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வோம்.இந்த ஆண்டு 25 இலட்சத்துக்கும் அதிகளவான சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளோம். அநுராதபுரம் பகுதியில் உள்ள கலாச்சார அம்சங்களை மேம்படுத்தி அதனுடாக சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இதற்கு இந்தியா முழுமையான நிதியுதவி வழங்குவதாக இணக்கம் தெரிவித்துள்ளது.

பொதுவான கொள்கையை அடிப்படையாகக் கொண்டு வெளிநாட்டு கொள்கையை பலப்படுத்தியுள்ளோம்.இந்திய அரச தலைவர் அடுத்த மாதம் இலங்கைக்கு வருகைத் தரவள்ளார். ஜப்பான், வியட்நாம் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் எமக்கு அழைப்பு விடுத்துள்ளது. சகல நாடுகளுடன் இணக்கமாகவே செயற்படுவோம் என்றார்.