கொவிட்டில் தொற்றில் பலவந்தமாக எரிக்கப்பட்டவர்களுக்காக பிராத்திக்க அழைப்பு

69 0

மார்ச் 31 பலவந்தமாக எரிக்கப்பட்ட 278 பேரின் குடும்பங்களுக்கான பிரார்த்தனைகளுக்கும் ஆதரவுக்கும் நினைவுபடுத்தலுக்குமான நாளாகும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான பிராத்தனைக்கும், உணர்வுகளை பிரதிபலிப்பதற்கும் ஆதரவு வழங்குவதற்கான நாளாக அனுஷ்டிப்பதற்கு அனைத்து சமூகங்களுக்கும் அழைப்பு விக்கிறோம் என பலவந்தமாக எரிக்கப்பட்டவர்களுக்கான ஞாபகார்த்த ஏற்பாட்டுக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏற்பாட்டுக்கழுவின் தலைவர் அஸ்–ஷேக் எம்.எச்.எம். புர்ஹான் பஹ்ஜி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2020 மார்ச் 31 அன்று இலங்கையின் நீர்கொழும்பில் கொவிட் 19 பாதிப்புக்குள்ளான ஒரு முஸ்லிமின் ஜனாசா முதல் தடவையாக பலவந்தமாக எரிக்கப்பட்டது. இது முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு சோகமானதும் வேதனையானதுமான அத்தியாயத்தை தொடக்கி வைத்தது. அதைத் தொடர்ந்து வந்த மாதங்களில் 20 நாள் குழந்தை உட்பட பாதிக்கப்பட்டவர்கள் 278 பேர் குடும்பங்களின் விருப்பத்திற்கு மாறாக தகனம் செய்யப்பட்டனர். தகனம் செய்யப்படுவோம் என்ற பயத்தினால் பல முஸ்லிம்கள் கொவிட் 19ஆல் பாதிக்கப்பட்ட போது மருத்துவ உதவியை நாடுவதைத் தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகினர்.

கட்டாய தகனம் தேசிய மற்றும் சர்வதேச சீற்றத்தைத் தூண்டியது, மனித உரிமை அமைப்புகளும் உலகளாவிய முஸ்லிம் சமூகங்களும் இந்தக் கொள்கையைக் கண்டித்தன. கொவிட் 19 உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் உடல்களைக் கையாள்வதற்கான ஒரே வழியாக தகனம் செய்வதை திணிப்பது மனித உரிமை மீறலுக்கு இணையானது. இறந்த உடல்களை அடக்கம் செய்வதனால் கொவிட் 19 போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகரிக்கும் என்பதற்கு இலங்கையிலோ அல்லது வேறு நாடுகளிலோ நிறுவப்பட்ட மருத்துவ அல்லது அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை.

அடிப்படை உரிமையை மீறி மேற்கொள்ளப்பட்ட இந்த பலவந்த எரிப்பு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆழமான மன உளைச்சலையும் ஆத்மார்த்தமான காயங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அவர்களின் அன்புக்குரியவர்களுக்காக துக்கத்தை வெளிப்படுத்தவும் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கும் அவர்களுக்கு

வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த வேதனையான அநீதியை ஞாபகப்படுத்தும் வகையில் மார்ச் 31ஆம் திகதி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான பிராத்தனைக்கும், உணர்வுகளை பிரதிபலிப்பதற்கும் ஆதரவு வழங்குவதற்கான நாளாக அனுஷ்டிப்பதற்கு அனைத்து சமூகங்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம்.

அத்துடன் ஏப்ரல் 6ஆம் திகதி காலை 10 மணிக்கு கொழும்பு 6இல் உள்ள மரைன் கிராண்ட் மண்டபத்தில் பல இனங்களினதும் சங்கமத்துடன் ஒரு நினைவு நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.