வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

17 0

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை (20) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி – கொழும்பு பிரதான வீதியில் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நபர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 64 வயதுடைய ரதாவடுன்ன பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், லொறியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மஹியங்கனை பொலிஸ் பிரிவின்  பதியத்தலாவ மஹியங்கனை வீதி – ஒருபெதிவெவ  பகுதியில், பதியத்தலாவயிலிருந்து மஹியங்கனை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிர்த்திசையில் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்களும், பின்னால் சென்றவர்களும் சிகிச்சைக்காக மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அராவத்த, மஹியங்கனை பகுதியைச்  சேர்ந்த 35 வயதுடையவராவார்.

மேலும், குறித்த விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.