பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான சித்திரவதை வழக்குகளுக்கு விசாரணை நடவடிக்கை

102 0

நீதிமன்றங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான சித்திரவதை வழக்குகளை வாரத்தில் ஒரு தினத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்த முடியுமாகும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ராேஹினி கவிரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  சனிக்கிழமை (08) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

1857ஆம் ஆண்டு தொழிற்சாலை ஒன்றில் இருந்து பெண்கள் வெளியேறி மேற்கொண்ட புரட்சியின் வெளிப்பாடாகவே நாங்கள் தற்போது பெண்கள் தினமாக கொண்டாடுகிறோம்.

பெண்கள் தினம் எந்த காலப்பகுதியில் இருந்து கொண்டாடப்படுகின்றபோது ஐக்கிய நாடுகள் சபை 1975ஆம் ஆண்டே பெண்கள் தினத்தை உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தி இருக்கிறது.

அப்போது இருந்த தொனிப்பொருள் கடந்த காலத்தை கொண்டாடி எதிர்காலத்தை திட்டமிடுதலாகும். ஆனால் நாங்கள் ஒவ்வொரு வருடமும் பெண்கள் தினத்தை கொண்டாடுகிறோமே தவிர எதிர்காலத்தை திட்டமிடுகிறோமா என சிந்தித்து பார்க்க வேண்டும்.

உலகில் பெண்கள் எதிர் கொள்கின்ற பிரச்சினைகள் பெண்களின் தவறினால் ஏற்படுவதல்ல. இன்று வீடுகளில் பெண்கள் பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாகுகின்றனர். மற்றவரின் பிரச்சினைக்கே அந்த பெண் தொந்தரவுகளுக்கு ஆளாகின்றாள்.

பட்டதாரி விண்ணப்பதாரிகளில்  நூற்றுக்கு 64.8 வீதம் பெண்களாகும் ஆனால் அந்த வருடத்தில் தொழில் அணியில் நூற்றுக்கு 32,1வீத பெண்களே இருக்கின்றனர்.

அதேநேரம் ஆண்களில் நூற்றுக்கு 75 வீதமானவர்கள் பெண்களை தொழிலுக்கு இணைத்துக்கொள்வதை தவிர்க்கின்றனர். கப்பேற்று விடுமுறையை காரணமாகக்கொண்டு இதனை செய்ய முயற்சிக்கின்றனர். இது பெண்களின் தவறு அல்ல.

அதேபோன்று பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் பெண்களில் நூற்றுக்கு 90 வீதமான பெண்கள் பாலியல் மற்றும் வாய்மூல தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர். 5பெண்களில் 1ஒருவர் தங்களுக்கு நெருக்கமானவர்களால் உடல் ரீதியில் அல்லது பாலியல் ரீதியில் தொந்தரவுகளுக்கு ஆளாகுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இது பெண்களின் தவறால் ஏற்படுவதல்ல. நாங்கள் தெரிவிக்கும்  பெண் சமத்துவம், உரிமைகள், வலுவூட்டல்கள் எங்கே?  இவை அனைத்தும் ஆண்களின் சிந்தனை ரீதியான பிரச்சினையாகவே காண்கிறேன். சட்டம் இயற்றுபவர்களின் பிரச்சினையாகவே காண்கிறேன்.

2022ஆம் ஆண்டு மாத்திரம் பெண்கள் பாலிய துஷ்பிரயோகம் 1984 சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன. ஏறத்தாள நாள் ஒன்றுக்கு 5 துஷ்பிரயோகங்கள். பதிவாகி இருக்கின்ற பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்டிருப்பது 16 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளைகளாகும்.

2023ஆம் ஆண்டு 16வயதுக்கு குறைந்த சிறுவயது கர்ப்பமடைந்தவர்களின் எண்ணிக்கை 163. 2024இல் அது 213ஆக அதிகரித்துள்ளது. அந்த 213இல் 10வயது பெண் பிள்ளை ஒருவரும் இருக்கிறார். அதனால் எதிர்வரும் 5வருடங்களிலாவது இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அத்துடன் நாட்டின் வரவு செலவு திட்டம் பாலின சமத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு  தயாரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கிறோம். எம்மைவிட குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் கூட இந்த விடயத்தை கடைப்பிடித்து வருகின்றன.

அதேநேரம் வரவு செலவு திட்டத்தில் பெண்கள் மற்றும் மகளிர் அமைச்சுக்கே குறைந்த நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அமைச்சுக்களில் மிக பாரிய அமைச்சு இந்த அமைச்சாகும்.

நாட்டில் மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 70வீதமானர்கள் தொடர்பாக கதைக்கும் அமைச்சாகும். அதனால் இந்த அமைச்சு தொடர்பில் முறையான வேலைத்திட்டம் அமைக்கப்பட வேண்டும்.

அத்துடன் நீதிமன்றங்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வழக்குகளை வாரத்தில் ஒரு நாளில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரேரணை ஒன்று பெண்கள் குழுவினால் பிரேரிக்கப்பட்டிருந்தது.

அந்த பிரேரணையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலமே பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிவுக்கு கொண்டுவர முடியும் என்றார்.