எதிர்த்தரப்பினர் மீது சேறுபூசும் அரசியல் கலாசாரத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்

105 0

மக்கள் விடுதலை முன்னணியால் எமது இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதன் காரணமாகவே நகர அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து 25 – 50 சதவீத முற்பணத்தை செலுத்தி வீடுகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டது. எனவே பொய்யான பெயர் பட்டியல்களை வெளியிட்டு எதிர்தரப்பினர் மீது சேறுபூசும் அரசியல் கலாசாரத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.

கொழும்பில்  சனிக்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமது இயலாமையை மறைப்பதற்காக ஏதேனுமொரு பெயர் பட்டியல்களை வெளியிடும் அரசாங்கம் தற்போது வீடுகள் பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது.

வேலைத்திட்டங்களை முன்னெடுத்து மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு பதிலாக ஏனைய அரசியல்வாதிகள் மீது சேறு பூசுவதன் ஊடாக தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது.

அன்றைய சந்தைப் பெறுமதிக்கமையவே அந்த வீடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. முற்பணம் மாத்திரமின்றி எஞ்சிய தொகையை இரு தவணைகளில் உரிய நேரத்தில் நான் செலுத்தியிருக்கின்றேன். மிகுதித் தொகையையும் அவ்வாறே செலுத்துவோம். இதில் என்ன நஷ்டம் என அரசாங்கம் கூறுகிறது?

இவ்வாறு பொய்யான பட்டியல்களை வெளியிடுவதில் மாத்திரமே இந்த அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பொய் கூறி மக்களை மேலும் ஏமாற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம். ஜே.வி.பி.யே எமது வீடுகளை தீக்கிரையாக்கி எமது சொத்துக்களை அழித்தது. எனவே எமக்கு கிடைக்கப் பெற்ற இழப்பீடுகள் குறித்து பேசுவதற்கு இவர்களுக்கு உரிமையில்லை என்றார்.