கற்பிட்டிக்கு அண்மித்த கோளபத்து தீவுப் பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான, 200 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன.
இதேவேளை, இந்தப் பொதிகளை கொண்டுவந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கற்பிட்டி ஆனவாசல பிரதேசத்தைச் சேர்ந்த நால்வரையும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, புத்தளம் மாவட்ட நீதிமன்ற நீதவான், பொலிஸாருக்கு நேற்று (03) அனுமதியளித்துள்ளார். காட்டுப் பகுதியில், கேரள கஞ்சாப் பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக, கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கற்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வல ஆராச்சி தலைமையிலான விசேட பொலிஸ் குழுவொன்று, குறித்த பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (02), தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்போது குறித்த காட்டுப் பகுதியில், மரமொன்றில், 7 பாரிய பொதிகளில், கட்டித் தொங்கவிடப்பட்ட நிலையில், மிகவும் சூட்சுமமான முறையில், வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டன. கஞ்சாப் பொதிகள், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு, இரகசியமான முறையில் குறித்த காட்டுப் பகுதிக்குள், சூட்சுமமான முறையில், மறைத்து வைத்து விற்பனை செய்யும் நோக்கிலேயே, மரமொன்றில் தொங்க வைக்கப்பட்டிருந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர். –

