எதிர்வரும் காலத்தில் தேசிய ஊடகக்கொள்கை அறிமுகப்படுத்தப்படும் – ஜகத் மனுவர்த்தன

77 0

தேசிய ஊடக கொள்கை ஒன்று எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படும். ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொழிற்றுறை ரீதியிலான ஒழுக்க நெறிமுறை தொடர்பில் விசேட செலுத்த வேண்டும். ஊடகங்களின் செயற்பாடுகளினால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ள கூடாதென  தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06)  நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின்       சுகாதாரத்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சு  மீதான  குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில்   மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர்   மருந்து தடுப்பூசிக்கு பதிலாக  கலப்படம்  செய்த தடுப்பூசிகளை இறக்குமதி செய்து அப்பாவி மக்களின்  ஆரோக்கியத்தை அச்சுறுத்தலுக்குள்ளாக்கினார். இவருக்கு எதிராக  தற்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரை பதவி நீக்குவதற்காக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தவர்கள் இன்று  நாட்டு மக்களின் சுகாதார நலன் பற்றி பேசுவது   ஆச்சரியத்துக்குரியது. இம்முறை வரவு  செலவுத் திட்டத்தில்  ஊடகத்துறை அமைச்சுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊடகத்துறை அமைச்சின் கீழ் 12 நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும் இந்நிறுவனங்கள் இலாபமடையவில்லை. தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம்  தொடர்ச்சியாக நட்டமடைந்துள்ளது. கடந்த காலங்களில்   இலங்கை  ரூபவாஹினி கூட்டுத்தாபனம்  கடந்த காலங்களில் அரசாங்கத்தின் பணிகளை இலவசமாக செய்துக் கொடுத்துள்ளது.

2021. ஆம் ஆண்டு 122 மில்லியன் ரூபா,  2022 ஆம் ஆண்டு 144 மில்லியன் ரூபா, 2023 ஆம் ஆண்டு 155மில்லியன்  ரூபா நிதியை  அரசாங்கம் இலங்கை  ரூபவாஹினி   கூட்டுத்தாபனத்துக்கு  செலுத்த வேண்டியுள்ளது.

2011 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஒளிப்பரப்பு செய்தது. இதற்காக நிறுவனம்   143 மில்லியன்  ரூபாவை செலவு செய்து, 150 மில்லியன்   ரூபாவை  வருவாயாக திரட்டிக் கொண்டது. இதன் பின்னர் ராஜபக்ஷர்களின் மகன்மார்கள்  விளையாட்டு துறைக்காக  புதிதாக அலைவரிசைகளை ஆரம்பித்தார்கள். இதற்கு கூட்டுத்தாபனத்தின் வளங்கள் பயன்படுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்தே கூட்டுத்தாபனம் நட்டமடைந்தது. இதன் சுமை இன்று மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அரச ஊடகத்துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச ஊடகங்கள் இனி திறைச்சேரிக்கு சுமையாக இருக்காது.  ஊடகங்களின் ஒழுக்க நெறிக் கோவை குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். ஒருசில ஊடகங்கள் முறையற்ற வகையில் செயற்படுகின்றன என்றார்.