இலங்கையில் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்ற உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நாங்கள் மிக உன்னிப்பாக அவதானிப்போம். அந்த செயற்பாடு வெற்றிபெற வாழ்த்துகிறோம் என்று இலங்கைக்கான நியூஸிலாந்து நாட்டின் டேவிட் பிண் தெரிவித்தார்.
மேலும் இந்த செயற்பாட்டில் இலங்கைக்கு நியூஸிலாந்தின் உதவிகள் தேவையானால் அவர்கள் எம்முடன் கலந்துரையாடல் நடத்தலாம். மனித உரிமைகள் விடயத்தில் எமது நாடு சிறந்த வரலாற்றைக் கொண்டிருக்கிறது என்றும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.
பாத்பைன்டர் அமைப்பு ஏற்பாடு செய்த இராஜதந்திர கலந்துரையாடல் கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது.
அதில் பங்கேற்று ஊடகவியலாளர் மற்றும் இராஜதந்திரிகள், கல்விமான்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.
இதன்போது இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் இருதரப்பு வர்த்தக விடயங்கள் மற்றும் நியூஸிலாந்தின் பாற்பண்ணை செயற்பாடுகள், இலங்கைக்கான பால் உற்பத்திப் பொருள் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக பேசப்பட்டன. குறிப்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாரிய சர்வதேச வர்த்தக மீதி இடைவெளிக்கான காரணம் என்னவென்று உயர்ஸ்தானிகரிடம் இதன் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர்,
‘’ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் எனும் போது அதில் வர்த்தக மீதியை மற்றும் பார்க்கக் கூடாது. அந்த வர்த்தகத்தின் முழுத் தன்மையையும் ஆராய வேண்டும். நாங்கள் இலங்கைக்கு அதிகமாக ஏற்றுமதி செய்கிறோம். ஆனால் மற்றொரு நாட்டிலிருந்து நாம் அதிகமாக இறக்குமதி செய்கிறோம். இது ஒரு வர்த்தக செயற்பாடாக இருக்கிறது. இதனை இந்த நோக்கில்தான் பார்க்க வேண்டும். மாறாக வர்த்தக மீதி குறைவாக இருக்கிறது என்ற விடயத்தில் இதனை பார்ப்பது பொறுத்தமாக அமையாது. சர்வதேச வர்த்தகம் என்பது இவ்வாறுதான் செயற்படும்’’ என்று பதிலளித்தார்.
இலங்கை நியூஸிலாந்திலிருந்து வருடத்துக்கு 253 மில்லியன் டொலர்களுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், இலங்கையிலிருந்து நியூஸிலாந்துக்கு 26 மில்லியனுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
‘’ இலங்கை சிறந்த ஏற்றுமதி உற்பத்திகளை நோக்கி பயணிக்க வேண்டும். சிறந்த உற்பத்திகளை நியூஸிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய இலங்கை முன்வந்தால் அதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது. அந்த சந்தர்ப்பத்தை சிறப்பாக பயன்படுத்த முடியும்’’ என்று நியுஸிலாந்து உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாகவும் உயர்ஸ்தானிகரிடம் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது. இலங்கை அரசாங்கம் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை உருவாக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக நியுஸிலாந்தின் பார்வை என்ன? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதிலளித்த உயர்ஸ்தானிகர் டேவிட் பிண்,
‘‘இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விடயம் தொடர்பில் நாங்கள் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நாங்கள் தொடர்ச்சியாக உரையாற்றி வருகிறோம். உங்களுக்கு வேண்டுமானால் அவற்றை எடுத்து வாசித்து பார்க்கலாம். ஆனால், இலங்கையில் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்ற உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நாங்கள் மிக உன்னிப்பாக அவதானிப்போம். அந்த செயற்பாடு வெற்றிபெற வாழ்த்துகிறோம். இந்த செயற்பாட்டில் இலங்கைக்கு நியூஸிலாந்தின் உதவிகள் தேவையானால் அவர்கள் எம்முடன் கலந்துரையாடல் நடத்தலாம். மனித உரிமைகள் விடயத்தில் எமது நாடு சிறந்த வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இதனை சிறப்பாக செய்தால் இலங்கைக்கு சிறந்த சந்தர்ப்பங்கள் உள்ளன’’ என்று குறிப்பிட்டார்.
மேலும் சுற்றுலாத்துறை தொடர்பாகவும் கருத்து வெளியிட்ட உயர்ஸ்தானிகர்,
இலங்கையின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை மிக முக்கியமான ஒரு விடயமாக இருக்கிறது. நியூஸிலாந்திலிருந்து வருடமொன்றுக்கு 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்கு முயற்சிக்கிறோம். இது இலங்கைக்கு சிறந்த முன்னேற்றமாக அமையும் என்று நம்புகிறோம் என்றார்.
இலங்கையுடனான சீனாவின் உறவு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர்,
இதற்கு நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இலங்கையில் சிறந்த இராஜதந்திரிகள் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டார்.

