போக்குவரத்து பொலிஸாருக்கு 25 சதவீதத்தால் சம்பளம் அதிகரிப்பு!

85 0

போக்குவரத்துப் பிரிவுகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் சம்பளத் தொகையை 25 சதவீதத்தால் அதிகரிக்க  பொலிஸ் தலைமையகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தல், வீதி விபத்துகளை ஏற்படுத்துதல், அதிக வேகத்துடன் அல்லது மதுபோதையுடன் வாகனம் செலுத்துதல் போன்ற போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்கும் நோக்குடன் போக்குவரத்துப் பிரிவினரால் விசேட நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேற்படி போக்குவரத்து கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் வெகுமதியை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, போக்குவரத்து கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களின் தரத்தை மதிப்பீடு செய்து, பணி திறனை மேம்படுத்தும் நோக்குடன் சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளது.

போக்குவரத்து உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஊதியத்தை கடந்த மாதம் 1 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், 25 சதவீதத்தால் அதிகரிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரால் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு சுற்றரிக்கையினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிக்கள கடமைகளில் ஈடுபடும் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரிகள், வெளிக்கள கடமைகள் மற்றும் காரியாலய கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கும், வெளிக்கள கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதிகளுக்கும் சம்பளத் தொகையை அதிகரிக்குமாறும் குறித்த சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் கொடுப்பனவை தாமதமின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.