மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் உலகளாவிய அறிக்கை வியாழக்கிழமை (6) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் நிலையில், அதில் இலங்கையில் பணியாற்றிவரும் பெண் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ‘அரசுக்கு எதிரானவர்களாக’ முத்திரை குத்தப்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் கடந்த திங்கட்கிழமை (3) நடைபெற்ற அமர்வில், ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் அதன் சமகால நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் வாய்மொழிமூல அறிக்கை வாசிக்கப்பட்டது.
இந்நிலையில் உலகளாவிய ரீதியில் பின்தங்கிய மற்றும் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் பணியாற்றிவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டுவரும் ஒடுக்குமுறைகள் மற்றும் மீறல்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய அறிக்கையை மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலர் இன்றைய தினம் (6) பேரவையில் சமர்ப்பிக்கவிருப்பதுடன், அவ்வறிக்கை தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெறவிருக்கிறது.
உலக நாடுகளில் பலவற்றில் பணியாற்றிவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள் பற்றிய இந்த 19 பக்க அறிக்கையில், ‘மோதலின் போதும், மோதலின் பின்னரான சூழ்நிலைகளிலும், நெருக்கடி நிலைமைகளிலும் பணியாற்றிவரும் செயற்பாட்டாளர்கள்’ எனும் தலைப்பின்கீழ் இலங்கை நிலைவரம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணியாற்றிவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாவதாகவும், அவர்கள் ‘தீவிரவாதிகள்’ என முத்திரை குத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி பெண் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பலர் அரசுக்கு எதிரானவர்களாக அடையாளப்படுத்தப்படுவதாகவும், அவர்கள் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கும்போது தாக்குதலுக்கு உள்ளாவதுடன், சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை உள்ளடங்கலாக உலக நாடுகளின் அரசுகள் தத்தமது நாடுகளில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைப் பாதுகாப்பதற்கு பின்தங்கிய பகுதிகளில் பணியாற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களின் பணிக்குரிய பகிரங்க அங்கீகாரத்தை வழங்கல், பின்தங்கிய பகுதிகளில் பணியாற்றும் செயற்பாட்டாளர்களை அணுகுவதை இலகுவாக்கக்கூடியவகையில் அவர்களுடனான வலையமைப்பை வலுப்படுத்தல், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கென தற்போது நடைமுறையிலிருக்கும் செயன்முறையை மேலும் விரிவுபடுத்தி, வலுப்படுத்தல், அச்சுறுத்தல்கள் ஏற்படும் பட்சத்தில் முன்கூட்டியே அறிவிக்கக்கூடியவாறான சமூக வலையமைப்புக்களைக் கட்டியெழுப்பல், பின்தங்கிய பகுதிகளில் பணியாற்றும் செயற்பாட்டாளர்களுடன் பாதுகாப்பான முறையில் தொடர்புகொள்ளக்கூடிய தொடர்பாடல் வசதிகளை விரிவுபடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் ஐ.நா விசேட அறிக்கையாளர் மேரி லோலர் அவ்வறிக்கையில் பரிந்துரைத்துள்ளார்.

