இந்திய மீன்பிடிப் படகுகளின் அத்துமீறலை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

96 0

வடக்கில்  பூதாகரமாகி இருக்கும் இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக கடற்படையுடன் இணைந்து ஒரு இறுக்கமான திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப்பாகாப்பு மற்றும் சமூகவலுவூட்டவ் அமைச்சு மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

எமது நாட்டில் மீனவர்களுக்கு விதித்திருக்கும் அனைத்து சட்டங்களையும் மீறி இந்திய மீன்பிடி படகுகள் பாரிய அழிவுகளை மேற்கொண்டு வருகின்றதுடன் எமக்குரிய மீன்களையும் அள்ளிக்கொண்டு செல்கின்ற துப்பாகிய நிலை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இந்த விடயம் தொடர்பில் நாட்டில்

இருந்த அனைத்து அரசாங்கங்களும் நடவடிக்கை எடுப்போம் என கூட்டங்களை கூட்டி, பல சந்திப்புக்களை செய்தார்கள். இந்தியாவுக்கு சென்றும் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்கள். ஆனால் எந்த மாற்றத்தையும் நாங்கள் காணவில்லை.

அதனால் எமது கடற்படையுடன் இணைந்து ஒரு இறுக்கமான திட்டத்தை மேற்கொள்வதன் மூலமே இதனை தடுத்து நிறுத்த முடியும். இல்லவையென்றால் எமது மீனவர்கள் தொடர்ந்தும் வறுமை நிலையில் இருக்கும் நிலையே தொடர்ந்து செல்லும்.

அத்துடன் நன்னீர் மீன்டி திட்டத்தை முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் நன்னீர் மீன்பிடிப்புக்காக பல நல்ல திட்டங்களை வகுத்து செயல்பட முடியும். மன்னாரில் நன்னீர் தொடர்பில் கலாசார நிலையம் ஒன்றை அமைப்பதற்கு இந்தியா 10 மில்லின் டொலரை நன்கொடையாக வழங்குவதாக வாக்குறுதி வழங்கி இருக்கிறது. இதற்காக இந்திய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த செயல்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் மன்னார் மாத்திரம் அல்ல,வடக்கு கிழக்கு மக்கள் அதனால் பயன்பெற முடியும். இந்த கலாசார நிலையம் ஊடாக திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாக இருந்தால் பாரிய முன்னேற்றத்தை அடைய முடியும்.

மியன்மார் போன்ற நாடுகள் இவ்வாறன நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொண்டுள்ளதால் நன்னீர் மீன்பிடி முன்னேற்றமடைந்துள்ளது. அதனால் இதனை நடைமுறைப்படுத்த அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் வறுமை ஒழிப்பை மேற்கொள்ள ஜனசவிய, அஸ்வெசும என பல்வேறு திட்டங்கள் இருந்தபோதும் அதிகமான திட்டங்கள் அரசியல் மயப்பட்டதாக இருந்ததும் இதன் முன்னேற்றமின்மைக்கு காரணமாகவே காண்கிறோம். அதனால் அஸ்வெசும திட்டத்தை சரியான முறையில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் அந்த திட்டத்துக்கு தகுதியுள்ள இன்னும் அதிகமானவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று சமுர்த்தி அதிகாரிகள் எந்த தொழில் முன்னேற்றம் இல்லாமல் இருக்கின்றனர். இது அவர்கள் ஓய்வு பெற்றுச்செல்லும்போது பாதிப்பாக அமையும். அதனால் இது தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.