உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது போன்று 7வருடங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் மாகாண சபை தேர்தலையும் விரைவாக நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமையால் மாகாண அதிகாரங்கள் அதிகாரிவாதத்துக்கு ஆளாகி இருக்கின்றன என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் பொது நிர்வாக, மாகாண சபைகள், மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
நாட்டில் மாகாணசபை தேர்தல் 2018க்கு பின்னரில் இருந்து நடத்தப்படவில்லை. அதனால் மாகாண சபைகள் இன்று அதிகாரிகள் வாதத்துக்கு கீழ்ப்பட்டுள்ளன.மாகாணசபைகள் மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகளின் கீழ் செயற்பட்டுவரும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்ற வடக்கு மாகாண மக்களின் கோரிக்கையாக இருந்துவந்த நிலையிலேயே 13ஆம் திருத்தம் மேற்கொண்டு மாகாணசபை முறைமை ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் இந்த மாகாணசபைகளின் நடவடிக்கைகளை கடந்த 7 வருடங்களாக அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஆளுநர்களும் அதிகாரிகளுமே மேற்கொண்டு வருகின்றனர்.ஆளுநர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றனவர்கள். இதனால் மாகாண மக்களின் பிரச்சினை ஒன்றை தீர்ப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள முடியுமாகின்றபோதும் ஆளுநருடன் அதனை செய்ய முடியாது. ஏனெனில் ஆளுநர்களாக நியமிக்கப்படுவது பெரும்பாலும் தாேல்வியடைந்த அரசியல் வாதிகளையாகும். அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு அங்கு அரசியல் செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது.அதனால் மக்களே பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறையில் மோசடிமிக்க விருப்பு வாக்கு முறையை இல்லாமல் செய்து தொகுதிக்கு பொறுப்புக்கூற முடியுமான பிரதிநிதியை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறோம்.அதனால் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறையில் எவ்வாறான திருத்தங்களை மேற்கொண்டாலும் கிராமத்துக்கு பொறுப்புக்கூறக்கூடி மக்கள் பிரதிநிதி முறையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோன்று 25வீத பெண்கள் பிரதிநிதித்துவத்தை உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறையில் மேற்கொண்டிருக்கிறோம். அதிலும் எந்தவித குறைப்பும் மேற்காெள்ள இடமளிக்க வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். மாகாணசபை தேர்தலையும் விரைவாக நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

