புதிய வரவு- திட்டம் தொடர்பில் விவாதம் இடம்பெற உள்ள 6,7 ஆகிய இரு தினங்களும் சுகாதார ஊழியர்களுக்கான கொடுப்பனவு சலுகை குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சகல சுகாதார ஊழியர்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார்.
சுகாதார ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு தொடர்பில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து இன்றும் பாராளுமன்றத்தில் விவாதித்து வருகின்றனர். மேற்படி சம்பள உயர்வின் போது சுகாதார ஊழியர்களை புறந்தள்ளி உள்ளமை தெள்ளத் தெளிவாக தெரிகிறது. வேதன குறைப்பு தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளதுடன் அரசாங்கத்துக்கும் இது குறித்து அறிவித்துள்ளோம். ஜனாதிபதியை சந்திக்க முயற்சித்த போதும் அது சாத்தியப்படவில்லை.
எவ்வாறாயினும் சுகாதார அமைச்சருக்கு வழங்கப்பட்ட காலக்கெடு நிறைவடைந்துள்ளது. அவர் இப்பிரச்சினைக்கு எவ்வித தீர்வையும் வழங்கப் போவதில்லை. இதற்கு முன்னர் பதவிவகித்த சுகாதார அமைச்சர்களிடமிருந்து சற்று மாறுபட்ட நடத்தை கோளத்தை அவரிடம் காணமுடிகிறது. எமக்கான தீர்வை வழங்காது பாராளுமன்றத்தில் சுகாதார ஊழியர்களை வலுப்படுத்துவதுடன் சுகாதார சேவையை தொடர்ச்சியாக மக்களுக்கு வழங்கும் முயற்சி தொடர்பில் விவாதித்து வருகிறார்.
தற்போது ஆளும் கட்சிக்கு சார்பாக செயற்படக் கூடிய வகையில் புதிதாக 20 தொழிற்சங்கங்களை அமைச்சர் நளிந்த உருவாக்கியுள்ளார். இவ்வாறு அரசாங்கத்துக்கு சார்பாக தொழிற்சங்கங்களை உருவாக்குவது புதிய அரசியல் கலாசாரமாக உள்ளது. சுகாதார ஊழியர்களுக்கான சம்பள விவகாரத்தில் நாங்கள் சிறைக்கு அனுப்பிய கெஹலிய ரம்புக்வெல்ல முதற்கொண்டு முன்னாள் சுகாதார அமைச்சர்கள் பலரும் எமக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர்.
புதிய வரவு- திட்டம் தொடர்பில் விவாதம் இடம்பெற உள்ள 6,7 ஆகிய இரு தினங்களும் சுகாதார ஊழியர்களுக்கான கொடுப்பனவு சலுகை குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சகல சுகாதார ஊழியர்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். அதன் முதற்கட்டமாக 6 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதுடன் 7 ஆம் திகதியிலிருந்து வைத்தியசாலை மட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நோயாளிகளின் நலனை கருத்திற்கொண்டு சிறுவர் வைத்தியசாலை, மகப்பேற்று வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை மற்றும் சிறுநீரக வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு இடம்பெறாது. குறித்த வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் வழமைபோன்று பணிக்கு சமூகமளிப்பர். மேலும் அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகளின் போதும் கடமையில் ஈடுபட தயாராக உள்ளோம். எம்முடன் சமன் ரத்னப்பிரிய தலைமை தாங்கும் அரச தாதியர் சங்கத்தினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாத்திரம் ஈடுபட உள்ளனர் என்றார்.
இதேவேளை, சலுகை மற்றும் மேலதிக கொடுப்பனவு குறைப்புக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து எவ்வித தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபட போவதில்லை என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் மற்றும் அகில இலங்கை தாதியர் சங்கம் என்பன தெரிவித்துள்ளன.

