யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்!

265 0

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வும், ஊடகப் படுகொலைகள் மற்றும் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் சர்வதேச ஊடக சுதந்திர நாளான இன்று யாழ். நகரில் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இரு நிகழ்வுகள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில், நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அண்மையாக அமைந்துள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு முன் கூடிய ஊடகவியலாளர்கள் மறைந்த உள்ளூர்  ஊடகவியலாளர்கள், பன்னாட்டு  ஊடகவியலாளர்களை நினைவு கூறும் வகையில் மலரஞ்சலி செலுத்தி, ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து, யாழ். மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாகக் கூடிய ஊடகவியலாளர்கள் ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியும் ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தினர்.

ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும், ஊடக அடக்கு முறை நிறுத்தப்பட வேண்டும், படுகொலைகள், காணாமல் ஆக்கப்படல் போன்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நீதி விசாரணை வேண்டும் என்ற கோசமிட்டவாறு தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

இந்த நிகழ்வுகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா, வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான பா.கஜதீபன், வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள், யாழ். வணிகர் கழகப் பிரதிநிதிகள், சட்டவாளர்கள், பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள்  உட்பட பெருமளவான பொதுமக்களும் ஊடகவியலாளர்களுடன் கலந்து கொண்டனர்