தமிழ்க் கல்விக் கழகம் யேர்மனி , 27 வது அகவை நிறைவு விழா – கற்ரிங்கன், டில்லன்பூர்க்

1145 0

யேர்மனியில் தமிழ் !!!
யேர்மனியில் தனது நிர்வாகக் கட்டமைப்புக்குட்பட்ட 120 க்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் நிமிர்வின் உயர்வு மீண்டும் உறுதியாகியது… கடந்த 27 ஆண்டுகள் யேர்மனி முழுவதிலும் பரந்து விரிந்து வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ்மொழியையும் பண்பாடுகளையும் கற்றுக்கொடுத்த பெருமையோடு 27 வது அகவை நிறைவு விழாவைத் தமிழ்க் கல்விக் கழகம் கடந்த இருவாரங்களாக நடாத்தி வருகின்றது.

விழாவுக்கு முதன்மை விருந்தினர்களாக யாழ். பல்கலைக் கழகத்தின் வாழ்நாட் பேராசிரியர் மதிப்புக்குரிய திரு. அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும் அவரின் துணைவியார் முனைவர் திருமதி. மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அவர்களுடன் சிறப்பு விருந்தினராக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையின் பொறுப்பாளர் மதிப்பக்குரிய திரு. யோன்பிள்ளை சிறீராவீந்திரநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்து வருகின்றனர்.

விழாக்களின் வரிசையில் கடந்த 29.04.2017 சனிக்கிழமை வடமத்திய மாநிலத்துக்கான விழா கற்ரிங்கன் நகரிலும் 30.04.2017 ஞாயிற்;றுகிழமை மத்திய மாநிலத்துக்கான விழா டில்லன்பூர்க் நகரிலும் நடைபெற்றது. விழாக்களில் தமிழாலயங்களின் மாணவர்கள் பல்வகையான கலை நிகழ்வுகளை வழங்கி விழாவை மெருகூட்டினர். தமிழ்த்திறன், கலைத்திறன், பொதுத்தேர்வு போன்ற போட்டிகளில் யேர்மனி தழுவிய மட்டத்தில் முதல் மூன்று நிலைகளை அடைந்த மாணவர்கள் விழா மேடைகளில் சிறப்பாக மதிப்பளிக்கப்பட்டனர். அத்துடன் அம் மூன்று விடயங்களிலும் அதிக மதிப்பெண்களைப் பெற்ற தமிழாலயங்களும் விழாவில் சிறப்பான மதிப்பளிப்பைப் பெற்றன.

விழாவின் உச்ச நிகழ்வாகச் சென்ற ஆண்டு 12 ஆம் ஆண்டை நிறைவு செய்து சித்தியடைந்த 228 மாணவர்களுக்குப் பேராசியர் திரு. அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும் முனைவர் திருமதி. சண்முகதாஸ் அவர்களும் சிறப்பாக மதிப்பளித்தனர்.

5, 10, 15 ஆண்டுகள் தமிழாலயங்களில் ஆசிரியப்பணியாற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக மதிப்பளிக்கப்பட்டதுடன், 20 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணியாற்றியவர்களுக்கு தமிழ் வாரிதி என்றும் 25 ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ் மாணி என்றும் பட்டம் வழங்கி மதிப்பளிக்கப்பட்ட நிகழ்வு தமிழ்க் கல்விக் கழகத்தின் நிமிர்வின் உயர்வுக்குச் சான்று கூறியது.

மாநில மட்டத்திலான விழாக்களின் தொடரின் நிறைவு விழா 06.05.2017 சனிக்கிழமை தென் மாநிலத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்க் கல்விக் கழகத்தின் நடுவச் செயலகம் அமைந்துள்ள ஸ்ருற்காட் நகரில் அந்த நிறைவு விழாவை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதுடன் கோலாகலமாக அமையுமென்திலும் ஐயமில்லை.