வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய ஹங்கேரிய ஏற்றுமதி கடன் காப்புறுதி தனியார் கம்பனி மற்றும் இலங்கை அரசு ஆகியவற்றுக்கிடையிலான கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2022 ஏப்ரல் மாதத்தில் இலங்கை அரசினால் தெரிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு அரச கடன்களுக்காக கடன் செலுத்துகை கைவிடப்படும் இடைக்காலக் கொள்கை பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், அரச கடன் உறுதித்தன்மையை அடைவதற்காக கடன் மறுசீரமைப்பு செயன்முறைக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், தற்போது உள்நாட்டு கடன் சீராக்கல் செயற்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உத்தியோகபூர்வ கடன் கொடுத்தோர் குழுவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. மேற்சொல்லப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய வெளிப்படைத்தன்மை மற்றும் ஒப்பீட்டு ரீதியான தன்மையை உறுதிப்படுத்தி ஏனைய தொடர்புடைய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அதற்கமைய ஹங்கேரிய ஏற்றுமதி கடன் காப்புறுதி தனியார் கம்பனி மற்றும் இலங்கை அரசு ஆகியவற்றுக்கிடையிலான கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கையில் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
நிலுவைக் கடன் மீளாய்வு ஊடாக கடன் சலுகையை வழங்குவதற்கு ஹங்கேரிய ஏற்றுமதி கடன் காப்புறுதி தனியார் கம்பனி உடன்பாடு தெரிவித்துள்ளதுடன், அவ்வாறு மீளாய்வு செய்யப்படும் அனைத்து கடன்களும் மேற்குறித்த உத்தேச உடன்படிக்கையில் உள்ளடங்கும்.
உத்தேச உடன்படிக்கைக்கு சட்ட மா அதிபர் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். அதற்கமைய, ஹங்கேரிய ஏற்றுமதி கடன் காப்புறுதி தனியார் கம்பனியுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கை செய்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

