ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, இந்திய நல்லாட்சிக்கான தேசிய மையம் மற்றும் இலங்கையின் நிர்வாக மேம்பாட்டுக்கான நிறுவனம் (SLIDA) ஆகியவற்றுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாதிடப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்து வருட காலத்திற்கு 1,500 இலங்கை சிவில் அதிகாரிகளுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கு வழிவகை செய்வதாக அமைந்துள்ளது.
இலங்கை அரசின் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் அழைப்பின் பேரில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை திறம்பட செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை உறுதிப்படுத்த, இந்திய நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் பணிப்பாளர் ஜெனரல் கலாநிதி சுரேந்திரகுமார் பாக்டே தலைமையிலான குழு, இம்மாதம் 17 – 20 வரை இலங்கைக்கு விஜயம் செய்தது. இந்திய நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் இணைப் பேராசிரியர் கலாநிதி அசுதோஷ் பால் சிங்கும் இந்தக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
இந்தக் குழு, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமநாயக்க, பிரதமரின் செயலாளர் ஜி.பி. சபுதந்திரி மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார ஆகியோரையும் சந்தித்தது. இந்தக் குழு கண்டி மாவட்டச் செயலகத்திற்கும் சென்று மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பணியமர்த்தப்பட்ட இந்திய நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடியது.
இலங்கையின் நிர்வாக மேம்பாட்டுக்கான நிறுவனத்தில் நடைபெற்ற தொழில்நுட்ப அமர்வுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான முறைகள் இறுதி செய்யப்பட்டன. இலங்கை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட முன்னுரிமைகள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, பயிற்சிகள், நிர்வாகத்தில் டிஜிட்டல் முயற்சிகள், மின்-ஆளுமை, நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், அரசாங்க மின்-சந்தை, பொதுப் போக்குவரத்து அமைப்பு மேம்பாடு, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுய உதவிக்குழு முயற்சிகள், விவசாயம், மீன்வளம், வனவியல் போன்றவற்றில் தொழில்நுட்ப பயன்பாடுகள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இலங்கையின் சுமார் 40 சிவில் அதிகாரிகளுக்கான முதல் தொகுதி பயிற்சி விரைவில் நடைபெறும். குறிப்பிடத்தக்க வகையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பேச்சுவார்த்தையில் இருந்தபோதும், 200க்கும் மேற்பட்ட இலங்கை சிவில் சேவை அதிகாரிகள் ஏற்கனவே திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக பயிற்சி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





