தண்டவாளத்தில் மயங்கி விழுந்த சக ஊழியரின் உயிரைக் காப்பாற்றிய இந்தியர்

305 0

அமெரிக்காவில் ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் மயங்கி விழுந்த சக ஊழியரின் உயிரைக் காப்பாற்றிய இந்தியரின் துணிச்சலை பாராட்டிய போலீசார் அவருக்கு 1000 டாலர் பரிசு வழங்கினார்.

அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருபவர், அனில் வென்னவல்லி. இந்தியரான இவர் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று இவர், மேன்ஹட்டனில் உள்ள அலுவலகத்துக்கு வேலைக்கு செல்வதற்காக எடிசன் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தார். அப்போது தன்னோடு வேலை பார்க்கிற சக ஊழியரான மாதுரி ரெச்சர்லா என்ற 26 வயதான பெண், ரெயில் தண்டவாளத்தில் திடீரென மயங்கி சரிந்து விழுவதை பார்த்து விட்டார். அந்த நேரம் அதே ரெயில் தடத்தில் ஒரு ரெயில் தொலைவில் வந்து கொண்டிருந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் அனில் வேகமாக ஓடி, ரெயில் தண்டவாளத்தில் குதித்து தன் சக ஊழியரான மாதுரியின் உயிரைக் காப்பாற்றினார்.

அந்தப் பெண் ஊழியர் ரெயிலைப் பிடிப்பதற்காக சாப்பிடாமல் வந்ததில் மயங்கி விழுந்தது பின்னர் தெரியவந்தது. இருப்பினும், கீழே விழுந்ததில் அவரது முழங்கால் முறிந்தது. கணுக்காலும் உடைந்தது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே, மாதுரியை காப்பாற்ற அனில் சென்றிருந்த வேளையில் அவரது பை கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. அதில் மடிக்கணினி, ஹெட்போன், 200 டாலர் (சுமார் ரூ.13 ஆயிரம்), அடையாள அட்டை உள்ளிட்டவை இருந்ததாம். இருப்பினும் தன் உயிரைப்பற்றி கவலைப்படாமல், ரெயில் வந்தபோது தண்டவாளத்தில் துணிச்சலுடன் குதித்து, சக ஊழியரின் உயிரைக் காப்பாற்றிய அனிலின் துணிச்சலை போலீசார் பாராட்டினர். அவருக்கு 1000 டாலர் (சுமார் ரூ.65 ஆயிரம்) ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினர்.